

தலைநகர் சென்னையில் நிறைவுபெறாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து 25 வயதுடைய ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்றுவரும் நிலையில், அலட்சியப் போக்கால் இந்த மரணம் நடந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
“முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்; “எந்த இடத்தில் உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத நிலை இருக்கிறது” என்று தமிழகப் பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். மாநகராட்சியோ நெடுஞ்சாலைத் துறையோ எதுவாக இருந்தாலும், இரண்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகின்றன. எனவே, அமைச்சர் குறிப்பிட்டதுபோல இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததில் அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. மழைநீர் வடிகால் பணியையொட்டி சென்னையில் நடைபெறும் முதல் மரணம் அல்ல இது. கடந்த மே மாதத்தில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதத்தில் கே.கே.நகரில் வங்கிப் பெண் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.
மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாட நடைமுறைகளில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் மழைநீர் வடிகால் போன்ற பணிகள் அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், 2023இல் முடிக்க வேண்டிய பணிகளை 2022 பருவ மழைக்கு முன்பாக முடிக்க அரசு நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் உரிய தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கைப் பலகைகள் வைப்பது போன்றவை திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கப்படுவதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அளிக்கப்படும் வழிகாட்டல்கள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமே.
சென்னை மாநகராட்சித் தரவுகளின்படி மழைநீர் வடிகால் பணிகள் 790 சாலைகள், தெருக்களில் தொடங்கப்பட்டன. மொத்தமாக ‘கோர் சிட்டி’ மண்டலங்களின் பல பகுதிகளில் சுமார் 150 கி.மீ. நீளத்துக்குப் புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தவிர, சென்னையில் இருக்கும் நெடுஞ்சாலைகளிலும் சில பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பல பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் குண்டும்குழியுமாகக் காட்சியளிக்கின்றன. பருவமழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், மீண்டும் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாதவண்ணம் சம்பந்தப்பட்ட துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவைப்பதில் அரசு முதன்மை கவனம் செலுத்த வேண்டும்.