

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் என்றழைக்கப்படும் தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட் இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 நவம்பர் 9 தொடங்கி 2024 நவம்பர் 10 அன்று ஓய்வுபெறும்வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். இதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் நீண்ட காலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவராக அவர் இருப்பார். இவருடைய தந்தைநீதிபதி ஒய்.வி.சந்திரசூட் உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீண்ட காலம் (ஏழு ஆண்டுகள் நான்கு மாதங்கள்) தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த பெருமைக்குரியவர்.
தனிநபர் அந்தரங்கத்தை இந்திய அரசமைப்பினால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அங்கீகரித்தது, சபரிமலைக் கோயிலில் 18-50 வயதுப் பிரிவு பெண்களுக்கு அனுமதி அளித்தது, தன்பாலின உறவைக் குற்றமாக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ நீக்கியது, 24 வாரங்கள் வரை வளர்ந்த கருவைக் கலைப்பதற்கான உரிமை திருமணமாகாதபெண்களுக்கும் பொருந்தும் என்பதை உறுதிசெய்தது என ஜனநாயக, தாராளவாத, முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கும் பல தீர்ப்புகளை நீதிபதி சந்திரசூட் வழங்கியிருக்கிறார். இந்திய அரசின் ஆதார் சட்டத்தை அரசமைப்பின்படி செல்லும் என்று அங்கீகரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மைக்கு முரணான தீர்ப்பளித்த ஒரே நீதிபதி இவர்.
காலனி ஆதிக்கக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசத் துரோகச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டுவருகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுவது முன்னெப்போதையும்விட அதிகரித்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் சட்ட அறிஞர்களும் கவலை தெரிவித்துவருகிறார்கள். வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளுக்கு நீதிக்காகக் காத்திருக்க வேண்டியிருப்பது, குற்றவியல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்கள், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதிகளாகவே நீண்ட காலம் சிறையில் வாட வேண்டியிருப்பது போன்ற பிரச்சினைகளும் அப்படியே தொடர்கின்றன. இந்தச் சூழலில், நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவிருப்பது இயல்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதித் துறையின் பிரச்சினைகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒற்றை ஆளாகத் தீர்த்துவைத்துவிட முடியாது. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் அனைத்துப் பணியிடங்களையும் விரைவாக நிரப்புவது, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணிமூப்பு வயதை 65ஆக அதிகரிப்பது எனப் பல பிரச்சினைகள் மத்திய அரசின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பவை. ஆனால், விசாரணைக்குரிய வழக்குகளை விரைவாகப் பட்டியலிடுவது, விசாரணையைத் துரிதப்படுத்தி வழக்குகளை விரைவாக முடித்துவைப்பது உள்ளிட்ட விஷயங்களில் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது குறைந்த பதவிக் காலத்தில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. நீதிபதி சந்திரசூட் தன் பதவிக் காலத்தில் இதேபோல் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து, நீதித் துறையின் மாண்பைப் பாதுகாத்து, நீதித் துறை மீதான குடிமக்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.