

நாட்டில் அதிகரித்துவரும் பிரிவினைவாத அச்சுறுத்தலின் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இஸ்லாமியத் தலைவர்கள், பிரதிநிதிகளைச் சந்தித்துவருவதை, மதநல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பாகக் கருத முடிகிறது. டெல்லியில் உள்ள அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாஸியைச் செப்டம்பர் 22 அன்று நேரில் சந்தித்துள்ள மோகன் பாகவத், அவ்வமைப்பால் நடத்தப்படும் மதரஸாவுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடியுள்ளார்; அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றாக வாழ்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்று விரும்புவதாக மதரஸாவின் நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியக் கல்வியைக் கற்பிக்கும் மதரஸாக்களில் மாணவர்களுக்குத் தீவிரவாதக் கருத்துகள் புகட்டப்படுவதாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அவர்கள் தயார்செய்யப்படுவதாகவும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வின் சித்தாந்தத் தலைமையாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் மதரஸாவுக்குச் சென்றிருப்பதை இந்து-முஸ்லிம் இடையே பரஸ்பர நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கான முன்னெடுப்பாகப் பார்க்கலாம். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்ட இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஆளுமைகளையும் அறிவுஜீவிகளையும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும் மோகன் பாகவத் சந்தித்து உரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலக் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை, உத்தரப் பிரதேசத்தின் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கு உள்ளிட்ட விவகாரங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து-முஸ்லிம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் பலர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர் மீதான வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்துவதும் அப்படிப் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் போவதும் இஸ்லாமிய மக்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளும் இந்திய இஸ்லாமியர்களிடையே பரவலான அதிருப்தியைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பின்னணியில், சில இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.உடனான தொடர் உரையாடலுக்கு இசைவு தெரிவித்திருப்பது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் தேச ஒற்றுமையையும் பேணுவதற்கான முனைப்பு இரு தரப்பினரிடமும் இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரம், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி உள்ளிட்ட சில இஸ்லாமியத் தலைவர்களும் வேறு சில அமைப்புகளும் மோகன் பாகவத்தின் முயற்சிகள் வெறும் கண் துடைப்பு என்று குற்றம்சாட்டியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
மோகன் பாகவத்தின் முயற்சிகள் வரவேற்கத்தகுந்தவை என்றாலும், இஸ்லாமியச் சமூகத்தின் அனைத்துப் பிரதிநிதிகளின் நம்பிக்கையையும் அவர் பெற வேண்டும். மத மோதலுக்கு வழிவகுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மதங்களுக்கு இடையிலான நம்பிக்கையை வளர்க்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அவருடைய முயற்சிகள் நீண்டகாலப் பயனை அளிக்க முடியும்.