

கறுப்புப் பணம் என்றழைக்கப்படும் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனையைக் கட்டுப்படுத்த, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாதவையாக அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது. இந்தியப் பொருளாதாரத்தில் உச்ச மதிப்பு கொண்ட கரன்ஸி நோட்டுகளாக இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் கறுப்புப் பணத்தைச் சேமித்து வைக்கப் பெரிய அளவில் பயன்பட்டன. ஊழல் அதிகாரிகள், முறைகேடாகச் சேர்த்த ரொக்கத் தொகையைக் கிலோ கணக்கில் தங்கள் படுக்கைக்குக் கீழே பதுக்கிவைத்திருந்ததும், பதுக்கப்படும் பணம், பண வீக்கத்தை அதிகரிப்பதிலும், பயங்கரவாதத்துக்குத் துணைபுரிவதிலும் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்தத் துணிச்சலான நடவடிக்கையைப் பிரதமர் மோடி எடுத்திருக்கிறார். ரியல் எஸ்டேட் துறை ரொக்கத் தொகை இல்லாமல் இயங்குவதில்லை என்ற நிலை இருப்பதால், நேர்மையான முறையில் வரிசெலுத்துபவர்கள் ஒரு வீடு வாங்கப் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார். ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் தொகை அரசியல் நிதிக்குச் சென்று சேர்வது குறிப்பிடத் தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வந்தது, நமது பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமற்றதாக ஆனது. இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரூ.500, ரூ.2,000 நோட்டுகள், பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கும் கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க உதவும் என்கிறது அரசு. இப்படியான முடிவுகள் திடீரென்றுதான் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால், அன்றாடச் செலவுக்குத் தேவையான சில்லறைப் பணத்தை மாற்றுவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்க நேர்ந்தது துயரமானது. பொது நன்மைக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ற ஒரே காரணத்துக்காகவே, இதுபோன்ற உடனடி சிரமங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக, 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக உறுதியளித்திருந்தது. இந்நிலையில், அதிரடியாக ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது உள்ளிட்ட, மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த இரண்டு திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. 2007 கணக்கீட்டின்படி, இந்தியாவின் நிழல் பொருளாதாரத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.2% என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. இதில் மிகக் குறைந்த அளவு கறுப்புப் பணத்தையே மீட்க முடிந்தது. இன்றைக்கு, கணக்கில் வராத தொகை சுமார் ரூ. 31.8 லட்சம் கோடி என்று ‘கிரிஸில்’ எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
குறுகிய காலத்துக்குப் பொதுமக்களும் பொருளாதாரமும் வலியையும், குழப்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும், கறுப்புப் பண ஒழிப்பு போன்ற விஷயங்களில் இடைஞ்சல்கள் நிறைந்த நடவடிக்கைதான் தீர்வுக்கான ஒரே வழி என்று அரசு கருதியிருக்க வேண்டும். எனினும், போதுமான அடையாள ஆவணங்களோ, வங்கிக் கணக்கோ இல்லாத ஏழைகளும், வங்கிகளுக்கு அடிக்கடி சென்று வர முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களும், தற்போது செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு சிரமப்படுவதைத் தவிர்க்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை. பினாமி சொத்துகள், தங்கம், நிலம் போன்றவற்றின் வடிவில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தைக் கண்டறிவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் வடிவிலான பரிவர்த்தனைகளை மேம்படுத்தவும், மீண்டும் புதிய கறுப்புப் பண ராஜ்ஜியம் உருவாவதைத் தடுக்கவும் நிர்வாகச் சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!