

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்று விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அரசிடம் சமர்ப்பித்த இறுதி அறிக்கைகள் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன.
அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தின் அன்றைய ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது குறித்து தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவே தெரிந்துகொண்டதாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை டி.ஐ.ஜி-யான டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்களின் மூலமாக தூத்துக்குடி நிகழ்வுகள் அன்றைய முதல்வருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டதை ஆணையம் உறுதிசெய்துள்ளது. இதை முன்வைத்து, எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியின் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருடைய மரணம் குறித்துத் திடுக்கிடும் வாக்குமூலங்களை வெளிப்படுத்தியதோடு, மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை மறைந்த முன்னாள் முதல்வரின் தோழி சசிகலா மீது வைத்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம். சசிகலாவோடு சேர்த்து, அவருடைய உறவினரும் மருத்துவருமான கே.எஸ்.சிவக்குமார், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் குற்றமிழைத்தவர்களாகக் கருதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆணையத்தின் அறிக்கையில் உள்ளதுபோலத்தான் சம்பவங்கள் அப்போது நடந்தேறின என்பது நிரூபிக்கப்படுமேயானால், ஒரு மாநிலத்தின் முதல்வருடைய உயிரைக் காப்பாற்றும் முயற்சியில், அரசு அதிகாரத்துக்குத் துளிகூடத் தொடர்பு இல்லாத மனிதர்களின் தலையீட்டால் எப்படி முறைதவறிய உத்தரவுகள் வழங்கப்பட்டன, எவ்வளவு தவறான முடிவுகள் செயல்படுத்தப்பட்டன என்பது தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாகப் பதிவாகும். எனவே, தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கைமீது காட்டப்படும் வேகமும் விவாதமும், முன்னாள் முதல்வர் மறைவு தொடர்பான அறிக்கை சார்ந்தும் காட்டப்படுவது அவசியம்.
தவறு செய்தவர்கள் என்று இரண்டு அறிக்கைகளும் சுட்டிக்காட்டியவர்கள்மீது, ஒரே மாதிரியான விசாரணையும் நடவடிக்கையும் அமைய வேண்டுமே தவிர, அரசியல் கண்கொண்டு இந்த அறிக்கைகளைப் பார்ப்பதோ, அந்த அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதோ கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இரண்டு ஆணைய அறிக்கைகள் மீதும் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம், தனது பாரபட்சமற்ற தன்மையை நிரூபிக்கக் கிடைத்த மேலும் ஒரு நல்வாய்ப்பை அரசு சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.