

போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநில நெடுஞ்சாலைகளைக் கையகப்படுத்தி, அவற்றை மேம்படுத்தும் திட்டம் குறித்து மத்தியத் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இந்தச் சாலைகளை நான்கு அல்லது ஆறு வழிச் சாலைகளாக விரிவுபடுத்தி, 25 ஆண்டுகளுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பின்னர் அந்தச் சாலைகள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதில் இடப்படும் முதலீட்டை 12, 13 ஆண்டுகளில் திரும்பப் பெற்றுவிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலைப் போக்குவரத்தையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாலை வழியாகவே சரக்குப் போக்குவரத்தும் அதிகம் நடைபெறுகிறது. தொழில் வளர்ச்சிக்கும் சாலைப் போக்குவரத்து முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே, நெரிசலற்ற, மேம்பட்ட சாலை உள்கட்டமைப்பு அவசியமாகிறது. இது துரிதப் போக்குவரத்துக்கும் உதவும். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த 20 ஆண்டுகளில் மேம்பட்ட வடிவத்தை அடைந்திருக்கின்றன; ஆனால், இந்தியாவின் மொத்த சாலைகளில் இது 2.1% மட்டுமே. எஞ்சியவை பெரும்பாலும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்தான் வருகின்றன.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலை அல்லது பொதுப்பணித் துறைகளே மாநில நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கின்றன. இவற்றில் நெரிசலான சாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தி மேம்படுத்துவது குறித்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஆனால், இத்திட்டத்துக்கு மாநில அரசுகளிடமிருந்து எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு அந்தச் சாலைகள் மத்திய அரசின் வசமே இருக்கும் என்பது முரண்பாடுகளைத் தோற்றுவிக்கலாம்.
சாலைப் போக்குவரத்து ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், சாலைகள் மேம்பாடு, பராமரிப்பு குறித்துச் சில வரையறைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கு உரிமையும் அதிகாரமும் இருப்பதைப் போலவே மாநில நெடுஞ்சாலைகள் மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.
இந்த அதிகாரங்களைத் தாண்டி மாநில நெடுஞ்சாலைகளைக் கையகப்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம். ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அளவுக்கு அதிகமாகச் சுங்கக் சாவடிகள் இருப்பதாகப் புகார்கள் உள்ள நிலையில், இத்திட்டத்தால் கூடுதல் சுங்கச் சாவடிகள் அமைவது வாகன ஓட்டிகளின் சுமையை அதிகரிக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை வரியை வாகன ஓட்டிகள் செலுத்தும் சூழலில், அதற்குரிய தரமான சாலை வசதிகள் இல்லை என்ற குறைபாடும் இருக்கவே செய்கிறது. இச்சூழலில் நெரிசலான மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வது அவசியம்தான் என்றாலும், மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்கி இத்திட்டத்தை முன்னெடுக்கலாம். ஏற்கெனவே ஊரகப் பகுதிகளில் ‘பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்’ மூலம் சாலைகள் அமைக்கப்பட்டதை உதாரணமாகக் கொள்ளலாம். மேலும், இதுபோன்ற திட்டத்தால் மத்திய - மாநில அரசுகளுக்குள் ஏற்படும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம்.