

அயல்நாட்டு வேலைவாய்ப்புக்காக மோசடி முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் செலுத்திய இந்திய இளைஞர்கள் மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, வற்புறுத்தலின் பெயரில் அங்கு சைபர் குற்றங்கள் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மியான்மரில் இப்படிச் சிக்கிய தமிழர்கள் 13 பேர் இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு, காவல் துறையினரால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஐ.டி. உள்ளிட்ட புதிய துறைகளில் அதிகப் பணி வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றுக்கான போட்டியும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. மேலும் நாணய மதிப்புகளில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக இந்திய மதிப்பில் அதிக ஊதியம் கிடைக்கும் என்பதாலும் விரைந்து முன்னேறிவிட வேண்டும் என்னும் ஆசையினாலும் இளைஞர்கள் பலர் அயல்நாட்டுப் பணிகளை நாடுகின்றனர்.
அயல்நாட்டில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லும் போலி முகவர்கள் தொடர்பாக எச்சரித்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. முகவர்கள் மீது சந்தேகம் இருந்தால் காவல் துறையிடம் புகார் தெரிவிப்பதற்கான பிரத்யேகத் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் மக்களின் புகார்களுக்குக் காத்திருக்காமல் போலி முகவர்கள் உள்ளிட்ட மோசடியாளர்கள் அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதில் காவல் துறை முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 15 அன்று தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இது தவிர, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு - பயிற்சித் துறையின் சார்பில் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ முடித்தவர்களும் இவற்றின் மூலம் பல்வேறு பணிவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு வேலைகளுக்கும் உள்நாட்டு வேலைகளுக்குமான ஊதிய வேறுபாடும் குறைக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் இணையம், தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்ட புதிய துறைகளில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகள் திறமைவாய்ந்த இளைஞர்களுக்காகக் காத்திருக்கின்றன. அத்தகைய பணிவாய்ப்புகளைப் பெறுவதற்கான கல்வியும் பிற தகுதிகளும் அனைவருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகளைப் பெருக்குவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். நல்ல பணிவாய்ப்புகளைப் பெறுவதற்கு என்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் உள்ளிட்டவை தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டும் முகாம்களையும் அரசு சார்பில் முன்னெடுக்கலாம். வேலை தேடும் இளைஞர்களும் உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அயல்நாடு செல்வது தவிர்க்க முடியாததென்றால், அதற்கான சட்டபூர்வமான வழிகள், நம்பகமான வலைப்பின்னல்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டு செயல்பட வேண்டும்.