

தலைமைப் பண்பும் வசீகரத் தோற்றமும் கொண்ட கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்துவிட்டார். கியூப மக்களிடம் மட்டுமல்லாமல், லத்தீன் - அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' ஒப்பந்த நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியம் தலைமையிலான 'வார்சா' ஒப்பந்த நாடுகளுக்கும் இடையிலான 'பனிப்போரில்' அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதி, கல்வி, வீடமைப்பு என்று மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்தவர் அவர்.
சோவியத் யூனியன் எனும் சோஷலிச சாம்ராஜ்யம் சிதைந்து சின்னாபின்னமான பிறகும்கூட அமெரிக்க எதிர்ப்பில் அவர் சிறிதளவும் சமரசம் செய்துகொண்டதில்லை. 1959-ல் கியூபாவின் தலைமைப் பதவியை அவர் கைப்பற்றியபோது உலக நாடுகளின் தலைவர்கள் வரிசையில் அவரும் இடம்பெறுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தனது அரசியல் வாழ்வின் உச்சத்தில் சுமார் 50 ஆண்டுகள் அவர் மூன்றாவது உலக நாடுகளின் தளபதியாக உலக அரங்கில் செயல்பட்டார்.
அவரை உயிருடன் கொன்றுவிட அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. பல முயற்சிகளை மேற் கொண்டது. அனைத்துமே தோல்வியடைந்தன. இரு நாடு களுக்கும் இடையிலான விரோதம் மறைந்து, தூதரக உறவு ஏற்படும் அளவுக்கு நிலைமை கனியும் வரை அவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பது நினைவுகூரத்தக்கது. கியூபப் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ஏராளமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
காஸ்ட்ரோவின் உலகத் தலைமைத்துவத்துக்கு ஒரு சான்று, அணிசாரா இயக்கத்தில் அவருக்கு இருந்த செல்வாக்காகும். "சமத்துவம் அல்லது சாவு" என்ற அவருடைய கோஷத்தால் ஈர்க்கப்பட்ட பல தென்னமெரிக்க நாடுகள், தேச வளங்களை அரசுடமையாக்கி எண்ணெய், சுரங்க வளம் போன்றவற்றின் விற்பனையில் கிடைத்த பணத்தை மக்களுடைய நல்வாழ்வுக்குச் செலவிட்டன. பண்ட உற்பத்தி, விற்பனை ஆகியவற்றின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது போதாது என்பதை உலகப் பொருளாதாரப் பருவத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.
ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தொடங்கிய முயற்சிகள் இன்னமும் வலுவடையவில்லை. கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகள் எதுவும் மனதில் இல்லாத இப்போதைய தலைமுறை அமெரிக்கர்களும் கியூபர்களும் ஒற்றுமையாக வாழட்டும் என்ற நல்லெண்ணத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபாவுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டார். புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்தலுக்கு முன்னதாக எப்படிப் பேசியிருந்தாலும், ஒபாமாவின் வழியைப் பின்பற்றினால் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் தென்னமெரிக்கப் பிரதேசத்திலும் அமைதி வலுப்படும் என்பதில் சந்தேகமில்லை!