

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத 8,588 மாணவர்களின் தரவுகளைத் திரட்டி, அவர்களுக்குத் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவை என்பதோடு, முன்மாதிரியானவையும்கூட. 12ஆம் வகுப்புடன் அல்லாமல், உயர்கல்வியில் சேரும்போதுதான் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கை முழுமையடைகிறது. மேலும், உயர்கல்வியே ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமையும். அந்த வகையில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகராத மாணவர்களை, அதை நோக்கி நகர்த்தும் முன்னெடுப்பு, மாணவர்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
பொதுவாக, கடைசி நிலைப் படிப்பை முடிக்காமல் இடையில் நிற்பவர்கள், இடைநிற்றல் என்ற வரையறைக்குள் வருவார்கள். பள்ளிக் கல்வியில் 12ஆம் வகுப்பு என்பது கடைசி வகுப்பு. ஆனால், அதுவே உயர்கல்விக்குச் செல்வதற்கான நுழைவுவாயிலாகவும் அமைந்திருக்கிறது. இந்தப் பார்வையில் அணுகும்போது, பள்ளிக் கல்விக்குப் பிறகு ஒரு மாணவர் உயர்கல்வியைத் தொடரவில்லை என்றால், அதையும் கல்வி இடைநிற்றலாகவே கருத வேண்டும். ஓர் அறிவார்ந்த சமுதாயத்தைக் கல்வியால் மட்டுமே உருவாக்க முடியும் என்ற சூழலில், உயர்கல்விக்குச் செல்லாமல் போவது அதற்கு எதிர்மறையான சூழலைத்தான் உருவாக்கும்.
தமிழகத்தில் கல்வி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் மாணவர்கள் நலன் சார்ந்து பல திட்டங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாகவே உயர்கல்விக்குச் செல்லாத மாணவர்களை அரசு அணுகும் அம்சத்தையும் பார்க்க முடிகிறது. மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகத்தில் 2019-20ஆம் ஆண்டிலேயே உயர்கல்விச் சேர்க்கை 51.4%. இது தேசிய சராசரியைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம். இந்த எண்ணிக்கையைத் தொடர்ந்து தக்கவைப்பதும் அதிகரிப்பதும், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்விக்குச் செல்லும்போதுதான் சாத்தியமாகும். அதற்கு எந்தவொரு மாணவரும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற முனைப்பு தமிழக அரசிடமிருந்து வெளிப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. பள்ளிக் கல்வியோடு தங்கள் பணி முடிந்துவிட்டது என்று எண்ணாமல், உயர்கல்வியில் சேராத மாணவர்களைத் தேடிச்செல்லும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களும் பாராட்டத்தக்கவர்கள்.
ஆனால், இந்தச் செயல்பாடுகளை வெறுமனே உயர்கல்விக்குச் செல்லாத மாணவர்கள் குறித்த தரவுகளைத் திரட்டுவதோடும் அறிவுரை வழங்குவதோடும் நிறுத்திவிடக் கூடாது. அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைக் களைந்து, அவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான உதவிகளையும் வழங்க வேண்டும். மேலும், பள்ளிக் கல்வியை முடித்த அனைவரும் உயர்கல்வி வகுப்புகளில் சேர்ந்து அவற்றை முழுமையாக நிறைவுசெய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நடவடிக்கை அர்த்தமுள்ளதாக அமையும்.