

இந்தியாவின் கிராமப்புற வீடுகளில், முழுமையாகச் செயல்படும் குடிநீர்க் குழாய் இணைப்பை 62% வீடுகள் பெற்றிருப்பதாக மத்திய நீர்வளத் துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2024-க்குள் இந்தியாவின் கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை நோக்கி மத்திய அரசு நகர்ந்துகொண்டிருப்பதை இதன்மூலம் உணர முடிகிறது.
அனைத்துக் கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்பை வழங்குவதற்காக 2019இல் ‘ஜல் ஜீவன்’ இயக்கம் தொடங்கப்பட்டது. மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன்மூலம் இந்தியாவில் குடிநீர்க் குழாய் இணைப்பைப் பெற்ற கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு வீட்டிலும் நாளொன்றுக்கு ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சமாக 55 லிட்டர் குடிநீர் கிடைப்பதே முழுமையாகச் செயல்படும் குடிநீர்க் குழாய் இணைப்பு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்ற 75% வீடுகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் குடிநீரைப் பெறுவதாகவும், 4% வீடுகள் வாரம் 5-6 நாட்களும், 14% வீடுகள் வாரம் 3-4 நாட்களும் குடிநீர் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 8% வீடுகள் வாரம் ஒருநாள் மட்டுமே குடிநீரைப் பெறுவதாகவும் 80% வீடுகளில் குடிநீர்த் தேவை முழுமையாக நிறைவேறியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குழாய் இணைப்பு மட்டுமே எல்லா நேரமும் குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்துவிடாது என்பதை இது உணர்த்துகிறது.
குடிநீர்க் குழாய் இணைப்பு கிடைக்கப்பெற்ற கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கையில் மாநிலங்களிடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது. தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்கள், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் முழுமையாகச் செயல்படும் குடிநீர்க் குழாய் இணைப்பை 80% வீடுகள் பெற்றுள்ளன. ராஜஸ்தான், கேரளம், மணிப்பூர், திரிபுரா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாதிக்கும் கீழான வீடுகள் மட்டுமே முழு நேரம் செயல்படும் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன.
கிராமப்புறங்களில் 90% பள்ளிகள், அங்கன்வாடிகள், குடிநீர்க் குழாய் இணைப்பைப் பெற்றிருப்பதாக இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், கணக்கெடுப்பில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட 93% குடிநீர் மாதிரிகளில் பாக்டீரியா உள்ளிட்ட மாசு இல்லை என்றாலும் பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் கிடைக்கும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான குளோரின் இருப்பது தெரியவந்துள்ளது. இது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும்.
அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு என்னும் இலக்கு நிறைவேறப்பட வேண்டும். அத்துடன் ‘ஜல் ஜீவன்’ இயக்கத்தின் பயன்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகச் சென்றடைவதையும் குடிநீர்க் குழாய் இணைப்புகளின் மூலம் அனைவருக்கும் போதுமான அளவு தரமான குடிநீர் கிடைப்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.