கருக்கலைப்புச் சட்டம்: வரவேற்புக்குரிய புதிய தீர்ப்புகள்

கருக்கலைப்புச் சட்டம்: வரவேற்புக்குரிய புதிய தீர்ப்புகள்
Updated on
1 min read

எளியோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் சாதகமாகச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலும் குழப்பமும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதில் பெரும் தடையாக உள்ளன. மணமாகாத பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை இப்படியும் பார்க்கலாம். பெண்களுக்கான மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டம் இந்தியாவில் 1971இல் அமல்படுத்தப்பட்டது. கருக்கலைப்புக்கான தகுதி, கருக்கலைப்புக்கான காலம் போன்றவற்றை இச்சட்டம் நிர்ணயித்திருந்தது. அதுவரை பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்வதும் விருப்பமில்லாத கருவைச் சுமப்பதுமாக இருந்த பெண்களுக்கு இது ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது. இச்சட்டத்தின் நெறிமுறைகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டு, 24 வாரம் வரையிலான கருவை மருத்துவ முறைப்படி கலைக்கலாம் என்கிற சட்டம் 2021இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மணமாகாத பெண்களும் உரிய காரணங்களுக்காகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் எனவும் விருப்பமில்லாத கருவைச் சுமப்பது அவர்களது கண்ணியத்துக்கு எதிரானது எனவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பெண்களின் உடல்சார்ந்த விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. சட்டத்தில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லாத நிலையில், அதைத் தெளிவுபடுத்தவும் நீதிமன்றங்களின் தலையீடு தேவையாக இருக்கிறது. ஒரு பெண் கருக்கலைப்பு செய்துகொள்ளக் கணவரின் அனுமதி தேவையில்லை எனக் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது இந்தச் சட்டத்தின் வரையறையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. பெண்களுக்கு ஆதரவளிக்கும் இதுபோன்ற சட்டங்களும் தீர்ப்புகளும் நடைமுறையில் செயலாக்கம் பெறுகின்றனவா? விருப்பமற்ற கருவைக் கலைக்கும் போர்வையில் பெண் சிசுவைக் கலைப்பதற்கான சாத்தியமும் உண்டு என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதைக் காரணம்காட்டிப் பெண்ணின் உரிமையை மறுப்பதைவிட, கருவில் இருக்கும் குழந்தையின்பாலினத்தைக் கண்டறிந்து சொல்லும் ஸ்கேன் மையங்களைத் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையே.

மறுபுறம் கருக்கலைப்புக்குக் கணவரின் ஒப்புதல் குறித்து மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத நிலையில், பெரும்பாலான மருத்துவமனைகளில் குடும்பத்தினரின் இசைவு தேவை என நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனாலேயே பெண்கள் பலரும் விருப்பமில்லாத கருவைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் இப்படிக் கட்டாயப்படுத்துவதையும் கணவரின் இசைவின்றிக் கருக்கலைப்புக்கு வரும் பெண்களின் கோரிக்கையை நிராகரிப்பதையும் சட்டத்தை மீறும் செயலாகவே பார்க்க வேண்டும். கருக்கலைப்புக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பிரச்சினை ஏற்படுத்துவார்கள் என்பதற்காக மருத்துவர்கள் பயப்படுகிறார்கள் என்றால், அந்த அச்சத்தைப் போக்க வேண்டியதும் அரசின் கடமைதான். பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக அந்தக் குடும்பத்தினர் மீது காவல் துறையில் புகார் அளிக்க மருத்துவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்கிறபோது, மருத்துவர்களின் தயக்கம் தேவையற்றது. எந்தச் சட்டமாக இருந்தாலும் அது பற்றிய விரிவான பார்வையையும் புரிதலையும் அனைவருக்கும் ஏற்படுத்தினால்தான் சட்டத்தின் நோக்கம் முழுமை அடையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in