

திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு இரண்டாவது முறையாக அப்பொறுப்பை ஏற்றுள்ளார். திமுக-வின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்த இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் ஆற்றிய உரை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல என் நிலைமை உள்ளது’ என்று அவர் தன் வருத்தத்தைக் கொட்டியுள்ளார். ‘என்னை மேலும் துன்பப்படுத்துவதுபோல திமுக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் என்ன செய்வது? காலையில் எழுந்ததும் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைவோடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்க விடாமல்கூடச் செய்துவிடுகிறது. பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறை காரணமாக திமுக, பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது. நம் வீட்டின் கழிவறை, படுக்கை அறை தவிர, அனைத்தும் பொது இடமாகிவிட்டது. மொபைல் போன் மூன்றாவது கண்போலாகி விட்டது. எனவே, உங்கள் ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
திமுக-வினர் ஆங்காங்கே சர்ச்சைகளில் ஈடுபடுவது, ஆ.ராசா போன்றவர்களின் மத துவேஷப் பேச்சு, மக்கள் நலத் திட்டங்களைப் பயன்படுத்தும் அப்பாவி மக்களைக் கேலிசெய்து அமைச்சர்கள் சிலர் பேசுவது போன்றவற்றை மனதில் வைத்தே, ஸ்டாலின் தன் வருத்தத்தை வெளியிட்டு கட்சியினருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்ற வள்ளுவரின் வாக்கை மனதில் கொண்டு, திமுக-வினர்செயல்பட வேண்டியதன் அவசியத்தைக் கட்சித் தலைவர் என்ற முறையில் பொறுப்புடன் சுட்டிக் காட்டியுள்ளார். திமுக என்ற கட்சிக்கு விழுந்த வாக்குகள் மூலம் அக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது. ஆட்சி என்பது கண்ணாடிக் கிரீடம் போன்றது. அதைப் பாதுகாப்பதன் அவசியத்தை ஸ்டாலின் உணர்ந்திருந்தாலும் கட்சியினருக்கு இன்னும் ஆணித்தரமாக வலியுறுத்துவது அவசியம்.
உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சித் தலைமை பிறப்பித்த உத்தரவையே மதிக்காமல், கூட்டணிக் கட்சிகளுடனான ஒப்பந்தங்களை மீறி பதவிகளைப் பிடித்த வரலாறு திமுக-வுக்கு உண்டு. ‘தீப்பொறி’ பேச்சுகளுக்குப் பெயர் பெற்றவர்கள் திமுக-வினர்என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கோடு திமுக செயலாற்றிவரும் நிலையில், தனக்கு மட்டும் நல்ல பெயர் கிடைத்தால் போதாது, கட்சிக்கும் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர வேண்டிய தருணம் இது. தற்போது வெளியிட்டுள்ள எச்சரிக்கை வெறும் எச்சரிக்கையாக மட்டும் இருந்துவிடாமல், அடுத்து எவராவது வாலாட்டினால் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திமுக-வினரைக் கட்டுப்படுத்த முடியும்; பொதுமக்கள் மத்தியில் திமுக மீது நற்பெயரை உருவாக்க முடியும்.