ஆம்னி பேருந்துக் கட்டணம்: இனியும் அரசு தாமதிக்கக் கூடாது!

ஆம்னி பேருந்துக் கட்டணம்: இனியும் அரசு தாமதிக்கக் கூடாது!
Updated on
1 min read

வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தனியாரால் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக எழுந்த புகார்களுக்குப் பிறகு தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (டிஎன்பிஓஏ) அண்மையில் வெளியிட்ட கட்டண உயர்வுப் பட்டியல் பல தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. விமானப் பயணக் கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

உதாரணமாக, சென்னை - மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.1,930 - ரூ.3,070 வரையிலும் சென்னை - கோவைக்கான கட்டணம் ரூ.2,050 - ரூ.3,310 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்வு ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழக அரசின் மீதான அதிருப்திக்கும் வழிவகுத்திருக்கிறது. கரோனா கால இழப்புகள், எரிபொருள் விலை உயர்வு, சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு போன்றவற்றைக் கட்டண உயர்வுக்குக் காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைக்கிறார்கள். அதே நேரம், இவற்றால் மக்களும் ஏற்கெனவே தொடர் பாதிப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் இயற்கைப் பேரிடர்கள், அரசின் கொள்கை முடிவு ஆகியவற்றால் நிகழும் பாதிப்புகளை மக்களின் தலையில் சுமத்துவது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. ஆனால், “சொகுசுப் பயணத்தை விரும்புவோர்தான் ஆம்னி பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வால் ஏழை மக்களுக்குப் பாதிப்பில்லை” என கட்டண உயர்வுக்கு முன்பாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறிய கருத்து, சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகளைப் பெற்றது. மேலும், “ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அரசுப் பேருந்துகளைப் போல் சேவைசெய்ய முடியாது” என்று அமைச்சர் கூறியிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய அமைச்சகப் பொறுப்பில் இருப்பவர், இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இயல்பான ஒன்றுதான்.

ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளைவிட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதிகளோடு இருக்கின்றன என்பது சரியே. அதற்காகச் சற்றுக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துக்கொள்வதிலும் தவறு இல்லை. ஆனால், ஒரேயடியாகக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள கட்டணங்களை மறுபரிசீலனை செய்து, புதிய கட்டணப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆம்னி பேருந்து நிறுவனங்களிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 67இன்படி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் இருப்பதாக 2016இல் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு இனிமேலும் தயக்கம் காட்டவோ, தாமதிக்கவோ கூடாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in