

உத்தரப் பிரதேசத்தில் 2017 சட்டசபைத் தேர்தலில், பாஜகவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் அதிக இடங்கள் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லிவரும் நிலையில், பிற பெரிய கட்சிகள் ஒன்றிணையுமா எனும் கேள்வி உருவானது. முக்கியமாக, பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இதில் சமாஜ்வாடி கட்சியின் மீதே எல்லோருடைய பார்வையும் படிந்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சமாஜ்வாடி கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ‘சோஷலிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமை’க்கான குரல்கள் ஒலித்தன. ஜனதா தளத்திலிருந்து உருவான, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகெளடா, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தளத் தலைவர் அஜித் சிங் ஆகியோர் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். பிஹாரை விட உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணி உருவாவது சவால் என்றாலும், அதன் தேவையை அவர்களுடைய பேச்சு உணர்த்தத் தவறவில்லை. சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை காங்கிரஸின் தேர்தல் உத்திப் பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சந்தித்தது இது தொடர்பிலான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால், அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லிவிட்டார் முலாயம் சிங் யாதவ்.
2012 சூழலோடு ஒப்பிட்டால், காங்கிரஸும் பாஜகவும் அங்கு பெரிய சக்திகள் இல்லை. சட்டசபையில் மொத்தமுள்ள 403 இடங்களில், இக்கட்சிகள் முறையே 28 மற்றும் 47 இடங்களையே கைப்பற்றின. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலுக்கு அப்புறம் நிலைமை வேறு. 2012-ல் 15% வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக, 2014-ல் 42% வாக்குகளைப் பெற்றது. கூடவே, 71/80 மக்களவைத் தொகுதிகளை வென்றது.
பிஹாரில் 2014-ல் பெரும் வெற்றியைக் குவித்த பாஜகவின் முயற்சிக்குத் தடை விழ மிக முக்கியமான காரணம், எதிரும்புதிருமாக இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் எல்லா கருத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணைந்ததுதான். கூடவே, காங்கிரஸையும் தம் அணியில் இழுத்துக்கொண்டன. அந்தக் கூட்டணியில் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சி, பின்னர் அதிலிருந்து வெளியேறியது குறிப்பிடத் தக்கது. இப்போதும் அப்படியே நடந்திருக்கிறது.
பந்தைத் தன்னுடைய கோட்டுக்கு அப்பால் தள்ளிவிட்டது சமாஜ்வாடி கட்சி. பந்து இப்போது பகுஜன் சமாஜ் கட்சி பக்கம் சென்றிருக்கிறது. ஒரு பிரம்மாண்டமான மதச்சார்பின்மைக் கூட்டணியை மாயாவதியால் உருவாக்க முடியுமா? ராகுல் காந்தி என்ன செய்யப்போகிறார்? 2017 உத்தரப் பிரதேசத் தேர்தல் ஒரு மாநிலத்தின் தேர்தல் மட்டும் அல்ல; இந்தியாவின் எதிர்காலத்துடனும் அது பிணைக்கப்பட்டிருக்கிறது!