

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை அதன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு தடைசெய்துள்ளது. 2006இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கேரளத்தின் தேசிய வளர்ச்சி முன்னணியின் தொடர்ச்சியாக உருவானது. கர்நாடகத்தின் ஃபோரம் ஆஃப் டிக்னிட்டி, தமிழகத்தின் மனித நீதிப் பாசறை ஆகிய அமைப்புகளும் 2009இல் இதில் இணைக்கப்பட்டன. தொடர்ந்து மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளும் இதில் இணைந்தன.
சிறுபான்மையினர் அதிகளவில் உள்ள கேரளத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. அந்தக் காலகட்டத்திலேயே அப்போதைய முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அதன் தீவிர மதப் பிரச்சாரத்தை விமர்சித்தார். ஆனால், இந்நிலை சில ஆண்டுகளில் மாறியது. பிஎஃப்ஐயின் அரசியல் கட்சியான ‘சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா’வின் ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக நாடவேண்டி வந்தது. கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பொதுத்தேர்தல்களில் எஸ்டிபிஐ தொடர்ந்து போட்டியிட்டுவருகிறது. 2020 கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் 95 இடங்களைக் கைப்பற்றி, வலுவான வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது.
இஸ்லாமியச் சிறுபான்மையினரின் சமூக முன்னேற்றம் என்ற தன் குறிக்கோளுக்கு அப்பால், மத அடிப்படைவாத நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு வெளிப்படுத்திவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மார்க்சிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்களைக் கொலைசெய்த வழக்கில் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ. செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். பிஎஃப்ஐ நாராத்து அலுவலகத்திலிருந்து காவல் துறையால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த அமைப்பின் தேசியத் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான், தடைசெய்யப்பட்ட சிமி அமைப்பில் செயல்பட்டவர் என்பதன் மூலம், அதன் சிமி தொடர்பும் சர்ச்சைக்கு உள்ளானது. இயக்குநர் பி.டி.குஞ்சுமுகமதுவின் நூலை அடிப்படையாகக் கொண்டு, பேராசிரியர் டி.ஜே.ஜோசப், ‘மனிதனுக்கும் நபிக்குமான உரையாட'லாகக் கேள்வித்தாளை உருவாக்கினார். அந்தக் கேள்வியை உருவாக்கிய கையை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றனர். அது தொடர்பான விசாரணையில் பிஎஃப்ஐ தொண்டர்களின் தொடர்பு நிரூபணமானது. இதே போன்ற ஒரு பிரச்சினைக்காக ‘மாத்ருபூமி’ இதழுக்கு எதிராக பிஎஃப்ஐ போராட்டத்தை முன்னெடுத்தபோது, அந்த இதழ் மன்னிப்புக் கேட்டுப் பின்வாங்கியது. குடியுரிமை (திருத்தச்) சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையானபோது, மக்களிடையே பிஎஃப்ஐ பிரிவினையை விதைப்பதாக கேரள முதல்வர் குறிப்பிட்டார்.
பிஎஃப்ஐயின் அதிகாரபூர்வ மலையாள இதழான ‘தேஜ’ஸின் ஆசிரியர் அகமத் ஷரீப், ஒரு பத்திரிகை நேர்காணலில், இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்தத் தடைக்கு எதிராக பிஎஃப்ஐ நடத்திய ஊரடங்குப் போராட்டமும் வன்முறையாகியுள்ளது. சிறுபான்மையினர் நலன் என்பது ஜனநாயக அமைப்பில் முக்கியமான அம்சம். ஆனால், சிறுபான்மையினர் நலன் என்ற மறைவில் மத அடிப்படைவாதத்தைப் போராட்டமாக முன்னெடுப்பது இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கக்கூடியது. அதைச் செய்யும் எல்லாச் சிறுபான்மை, பெரும்பான்மை மத அடிப்படைவாத அமைப்புகளும் தடைசெய்யப்பட வேண்டியவையே.