

இந்தியா 1988-ல் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அதை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தது ஜப்பான். இந்தியாவுடனான எல்லா அரசியல் தொடர்புகளையும் நிறுத்தியது; இந்தியாவுக்கு அளித்துவந்த உதவிகளையும் நிறுத்தியது; சில பொருளாதாரத் தடைகளையும் உடனடியாக அறிவித்தது. 2001 வரையில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவில் ஏற்பட்ட இந்த விரிசல் தொடர்ந்தது. 2001-ல் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டன. மன்மோகன் சிங் அடுத்தகட்ட உறவுக்குக் கை நீட்டினார். 2009 முதல் இரு நாடுகளும் பரஸ்பரம் அக்கறையுள்ள நீண்ட காலப் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தொடங்கின. இப்போது பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பதற்கு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதில் வந்து நிற்கிறது.
இந்த உடன்பாடு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பெருக்குத் திட்டங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அணுஉலைகள் விற்பனை தொடர்பாக இந்தியாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அமெரிக்க, பிரெஞ்சு நிறுவனங்களில் ஜப்பானிய நிறுவனங்களுக்குக் கணிசமான பங்கு உரிமை இருக்கிறது. எனவே, இந்தியாவுக்கு அது உதவிகரமாக இருக்கும். அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரு நாட்டுடன், ஜப்பான் இவ்வாறு உடன்படிக்கை செய்துகொள்வது இதுதான் முதல் முறை. அணுசக்தி விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக விரும்பும் இந்திய நாட்டுக்கு இது தார்மிக ஊக்குவிப்பாகத் திகழும்.
இரு நாடுகளுக்கும் இடையில் குறைந்துகொண்டே வரும் உறவால் 1,500 கோடி டாலர்கள் என்ற அளவில் இருக்கும் வெளிவர்த்தகத்தை அதிகப்படுத்தவும், ராணுவரீதியிலான ஒத்துழைப்பை வளப்படுத்தவும் இச்செயல்கள் துணையாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளரப் பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். இந்த அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை ஜப்பானிய நாடாளுமன்றம் ஏற்க வேண்டும். இந்தத் தருணத்தில் “அணுஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை நமக்கு எதற்கு?” என்று தனிப்பட்ட முறையில் தான் நினைப்பதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியிருப்பது, ஜப்பான் போன்ற நாடுகளிடம் உதவி பெறுவதற்கு உதவி செய்யாது. இப்படியான பொறுப்பற்ற கருத்துகளை இந்தியத் தரப்பு தவிர்க்க வேண்டும்.
இந்திய - ஜப்பான் உறவையும் இரு நாடுகளுக்கு இடையேயான உடன்பாடுகளையும் சீனம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதையும் உற்றுக் கவனிக்க வேண்டும். ஜப்பானும் இந்தியாவும் உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலடியாக ரஷ்யா - பாகிஸ்தானுடன் சீனம் தனது உறவுகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, ஆசியக் கண்டத்தில் சீனத்துக்குப் போட்டியாளர் என்று கருதப்படும் இந்தியாவும் ஜப்பானும் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். கூடவே சீனா, ரஷ்யாவுடனும் இன்முக நட்பைப் பராமரிப்பதிலேயே நம்முடைய ராஜதந்திரம் இருக்கிறது!