Published : 23 Nov 2016 09:16 AM
Last Updated : 23 Nov 2016 09:16 AM

நியாயமான கொள்முதலுக்கு நடவடிக்கை எடுங்கள்!

வரும் ரபி பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துவிட்டது. கோதுமை, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பருப்பு வகைகள், புன்செய் தானியங்கள், எண்ணெய் வித்துகளுக்கும் அறிவித்திருப்பது கூடுதல் சிறப்பு. 2011-12-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பருவமழை நன்றாகப் பெய்த பருவத்தில் கொள்முதல் விலை உற்சாகம் அளிக்கும் வகையில் இருந்தால் கூடுதல் பரப்பில் விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்வார்கள். பயறு வகைகளுக்கும் எண்ணெய் வித்துகளுக்குமான கொள்முதல் விலை உயர்வு 10% முதல் 16% வரையில் இருக்கிறது. கோதுமைக்கான உயர்வு 6.6%. அரசு எதிர்பார்த்தபடி விதைப்பு இருந்தால் இந்த வேளாண் ஆண்டில் இரண்டாவது முறையாக அமோக விளைச்சலுக்கு வாய்ப்பு இருக்கிறது. முன்னதாக காரிஃப் பருவத்திலும் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. ஒரே வேளாண் ஆண்டில் இரண்டு முறை அமோக விளைச்சல் ஏற்பட்டால் விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஊக்குவிப்பு ஏற்படும்.

கடந்த 30 ஆண்டுகளாகப் பருவமழை போதாமையாலும் காலம் தவறிப் பெய்வதாலும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது. 2013-14-க்குப் பிறகு கொள்முதல் விலையும் உயரவே இல்லை. இப்போது உணவுப் பண்டங்களின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் குறைந்தபட்சக் கொள்முதல் விலை உயர்வு சாத்தியமானது. கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைத்தால்தான் கிராமப்புறங்களிலிருந்து, உற்பத்தித் துறைப் பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும். ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு கிராமப்பகுதிகளில் வருவாய் உயர்வது அவசியத் தேவையாகும்.

கொள்முதல் விலையை உயர்த்துவதோடு அரசு ஒதுங்கிவிடக் கூடாது. அறிவித்தபடி விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு வலுவான கொள்முதல் கட்டமைப்புகளை எல்லா மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும். குறிப்பாக, பருப்பு உள்ளிட்ட பயறு ரகங்கள் கொள்முதல் இதுவரையில் ஏமாற்றமளிக்கும் விதத்தில்தான் இருக்கிறது. இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயமும் ஏமாற்றமுமே விவசாயிகளுக்கு எப்போதும் எஞ்சுகிறது. விளைச்சல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் பருவத்திலும் இது நீடித்தால் விவசாயிகளுக்கு இந்தக் கொள்முதல் அமைப்பின் மீதே நம்பிக்கை போய்விடும். பிறகு மீண்டும் பழையபடி கோதுமை, நெல், கரும்பு சாகுபடிக்கே திரும்பிவிடுவார்கள்.

நம் நாட்டில் நுகர்வுத் தேவைக்கு மேல் நெல், கோதுமை சாகுபடியால் இருவிதப் பிரச்சினைகள் ஏற்படும். விவசாயிகளுக்கும் வருவாய் அதிகரிக்காது. சேமிப்பு கிடங்குகள் பற்றாக்குறையால் களத்து மேட்டிலேயே கோணிப்பைகளைப் போர்த்தி மூடி வைத்து வெயில் – மழைக்கும் பூச்சி தாக்குதலுக்கும் இரையாகி, கணிசமான கோதுமை, நெல் விளைச்சல் வீணாவதற்கே வழிவகுக்கும். இரண்டுமே விவசாயிகளுக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x