இணையவழிச் சூதாட்டத் தடை... முயற்சி சட்டமாகட்டும்!

இணையவழிச் சூதாட்டத் தடை... முயற்சி சட்டமாகட்டும்!
Updated on
1 min read

இணையவழிச் சூதாட்டத்தைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இணையவழிச் சூதாட்டத்தின் காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; பலர் வாழ்நாள் முழுமைக்கும் மீளமுடியாக் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில், இணையவழிச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தார்மிகக் கடமை தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டது.

கண்காணிப்புக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட பரந்துவிரிந்த இணையவெளியில், இந்தச் சூதாட்டங்கள் நடத்தப்படுவதாலும் அவை மனித உயிர்களைப் பறிக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதாலும் இணையவழிச் சூதாட்டத்துக்குத் தடைவிதிப்பதே சரியான தீர்வு என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதன்படி 2021 பிப்ரவரியில் அப்போதைய அதிமுக அரசு இணையவழிச் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டுகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. ஆனால், திறன் சார்ந்த விளையாட்டுகளைத் தடைசெய்வது அரசமைப்புக்கு விரோதமானது என்று கூறி, தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. இதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் இணையவழிச் சூதாட்டத்தால் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அப்பால், தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 10 அன்று இணையவழிச் சூதாட்டம் தொடர்பான புதிய சட்டம் குறித்து அறிவுரை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அரசுக்குச் சமர்பித்த அறிக்கையில், பணத்தை வைத்து விளையாடப்படும் இணையவழிச் சூதாட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றுக்கான விளம்பரங்களுக்கும் தடைவிதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. மாநிலப் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இணையவழிச் சூதாட்டத்தின் தாக்கங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மின்னஞ்சல், கலந்துரையாடல், கூட்டங்கள் ஆகியவற்றின் வழியாக மக்களின் கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை அடிப்படையாகக்கொண்டு, இணையவழிச் சூதாட்டங்களைத் தடைசெய்வதற்கான அவசரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த அவசரச் சட்டம், ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.

இணையவழிச் சூதாட்டத்தைத் தடைசெய்து கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட சட்டங்களுக்கு அந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் மக்களின் கருத்துகள், வலுவான காரணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள புதிய அவசரச் சட்டம், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றால்தான் நிலைக்க முடியும். ஆனாலும் இணையவழிச் சூதாட்டத்தின் தீமைகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தமிழக அரசு உணர்ந்து, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இவை தவிர, இணையவழிச் சூதாட்டத்தின் தீமைகள் குறித்து எச்சரிக்கும் பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாகவும் பிற வழிகளிலும் அரசு முன்னெடுக்கலாம். சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களிடம் இதைப் பேசுபொருளாக்குவதும் அவசியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in