

இந்தியாவில் வட மாநிலங்களைவிட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில்லறைப் பணவீக்கம், உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறைவாக இருப்பதாக மத்தியப் புள்ளியியல்-திட்டங்கள் அமலாக்கத் துறை சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்திய அளவில் ஜூலை மாதம் 6.7% ஆக இருந்த சில்லறைப் பணவீக்கம், ஆகஸ்ட் மாத நிலவரப்பட்டி 7.6% ஆக அதிகரித்துள்ளது. தானியங்களின் விலையேற்றம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் எதிரொலித்திருப்பதால், அது 9.5% ஆக அதிகரித்திருக்கிறது. பிப்ரவரி 2014-க்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலையேற்றம் இந்த உச்சத்தைத் தொட்டிருந்தாலும், பிற மாநிலங்களைவிட தென் மாநிலங்களில் அந்த விகிதம் குறைவாக இருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக குஜராத்தில் 11.5%, ராஜஸ்தானில் 10.4%, மேற்கு வங்கத்தில் 10.3%, உத்தரப் பிரதேசத்தில் 9.2%, மகாராஷ்டிரத்திலும் உத்தராகண்டிலும் 8.5% என மாநிலங்களில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் இருந்தது. எனினும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகஸ்ட் மாதம் சராசரியாக 5% அல்லது அதற்கும் குறைவாக, தெலங்கானாவில் அது தேசிய சராசரியைவிடக் குறைவாக (6%) இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பணவீக்கம் 5.37% (தேசிய சராசரி 7.6%), உணவுப் பொருட்களின் விலையேற்றம் 3.3%, உணவு தானியங்களின் விலையேற்றம் 2.7% என்ற அளவில் நிலவியது.
தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதே விலையேற்றம் குறைவாக இருப்பதற்குக் காரணம் என்று மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூ.2,205 கோடி அரிசிக்கும், ரூ.1,500 கோடி துவரம் பருப்புக்கும், ரூ.2,400 கோடி பாமாயிலுக்கும் அரசு வழங்கும் மானியம் உணவுப் பொருட்களுக்கான செலவைக் கணிசமாகக் குறைப்பதால், கடந்த பத்தாண்டுகளாகச் சந்தை விலையைவிடத் துவரம் பருப்பு, பாமாயில் முறையே ஐந்து மற்றும் ஆறு மடங்கு விலை குறைவாக மக்களுக்குக் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகளைப் பெரிதும் பாதிக்கும் விலைவாசி உயர்வு, அவர்கள் வருமானத்தில் 70%-ஐ உணவுக்காகச் செலவிடும் நிலைக்குத் தள்ளும். இந்நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களும் 50 முதல் 60% வரை உணவுப் பொருட்களைப் பொதுவிநியோகத் திட்டத்திலிருந்து (அன்னயோஜனா திட்டம்) பெறுவதால், அவர்களின் குடும்பச் செலவில் 35% வரை குறைகிறது. தமிழ்நாட்டில் உணவுப் பொருள் விலையேற்றம் கட்டுக்குள் இருப்பதற்கான முக்கியக் காரணம் இதுவே.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும்நாட்டின் சில்லறைப் பணவீக்கம், தொடர்ந்து 8ஆவது மாதமாக ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6%-க்கும் அதிகமாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. உலக நாடுகளில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து மிகக் கடுமையாக சரிந்துகொண்டிருப்பது விலைவாசி உயர்வு குறித்த அச்சத்தை மக்களிடம் நிலைபெறச் செய்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.