

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் பெற்றிருக்கும் வெற்றி, இதுவரை நாம் பார்த்திராத அமெரிக்காவை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஒரு தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்; ஆங்காங்கே போராட்டமும் வெடித்திருக்கிறது. மறுபுறம் ட்ரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகக் கடலில் மிதக்கின்றனர். இந்தத் தேர்தலில், இதுவரை இருந்திராத வகையில் மகளிர், கறுப்பினத்தவர், குடியேறிகள் என்று பல தரப்பினர் இலக்காக்கப்பட்டனர். ஆணாதிக்கம், வெள்ளை நிற ஆதிக்கம், இன ஆதிக்கம் என்று பலதரப்பட்ட ஆதிக்க உணர்வுகளும் பொங்கி வழிந்தன. பெண்கள் சிறுமைப்படுத்தப்பட்டனர். அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்குப் பிரச்சாரம் தரம் தாழ்ந்ததில்லை எனும் அளவுக்குச் சென்றது.
தேர்தலில் 53% ஆண்கள் ட்ரம்புக்கு வாக்களித்துள்ளனர். ஹிலாரிக்கு 41% ஆண்களின் வாக்குகள் கிடைத்தன. வெள்ளையின ஆண்களில் 58% பேர் ட்ரம்புக்கும், 37% பேர் ஹிலாரிக்கும் வாக்களித்தனர். இளைஞர்களின் வாக்குகள் ஹிலாரிக்கு அதிகம் கிடைத்தாலும் 45 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர் ட்ரம்புக்கே வாக்களித்திருக்கின்றனர். பட்டதாரிகள் அல்லாத வாக்காளர்களிலும் அதிகம் பேர் ட்ரம்புக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். வாழ்க்கைத் தரம் குறைந்ததால் கோபத்தில் இருந்த அமெரிக்க உழைக்கும் வர்க்கம், ட்ரம்பின் பக்கம் சாய்ந்திருக்கிறது. அரசியல், நிதித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடிகள் மீதான உழைக்கும் வர்க்கத்தின் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது.
யார் வர வேண்டும் எனும் விஷயத்தில் பெரும்பாலான அமெரிக்கர்கள் காட்டிய மெளனத்தின் அர்த்தத்தை அரசியல் விமர்சகர்களும் நிபுணர்களும் கவனிக்கத் தவறிவிட்டனர். வெளியான கருத்துகளில் பெரும்பான்மை ஹிலாரிக்கே ஆதரவாக இருந்ததால், அவர்தான் வெற்றி பெறுவார் என்றே பலரும் நம்பினர். ஆனால், ட்ரம்பின் ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள், ட்ரம்புக்குத்தான் தங்களுடைய வாக்கு என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயங்கியிருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது. யாருக்கு வாக்கு என்பதைத் தீர்மானிக்காமல் இருந்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திலும் 11% முதல் 18% வரை இருந்தது. அவர்களில் கணிசமானவர்கள் இறுதியில் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இந்தத் தேர்தல் முடிவு பிரெக்ஸிட் கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த எதிர்பாராத முடிவைப் போலவே இருக்கிறது.
எப்படியோ அமெரிக்காவின் அதிபராகப்போகிறார் ட்ரம்ப். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ட்ரம்ப் ஆற்றிய உரை அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் வகையிலேயே இருந்தது. வழமையான ஆணவமோ, சவடால்களோ அதில் இல்லை. வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவைச் சந்தித்தபோதும், இதுவரை இல்லாத அளவுக்கு முதிர்ச்சியுடன் நடந்துகொண்டார் ட்ரம்ப். இனியாவது வெறுப்புணர்வைக் கைவிட்டுவிட்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. ட்ரம்ப் இதே பண்பை ஆட்சியில் காட்டுவதுடன், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அரசாக அதை நடத்துவதிலும் காட்ட வேண்டும். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே அது பலன் தரும்!