

இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் அணிந்துகொள்ள வேண்டிய ஹிஜாபை (தலைமறைப்புத் துணி) ‘தவறான’ முறையில் அணிந்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட ஈரானிய-குர்து இனத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி (22), மர்மமான முறையில் உயிரிழந்தது, அந்நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. அமினி, மாரடைப்பினால் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினாலும் அவர் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக அமினியின் பெற்றோரும் செயற்பாட்டாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
ஈரானில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளின் காரணமாகப் பெண்களின் உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அமினியின் மரணம் இப்போது இந்தப் பிரச்சினையை விஸ்வரூபமாக்கியுள்ளது. தலைநகரம் தெஹ்ரான், ஷியா முஸ்லிம்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த மாஷத் ஆகிய நகரங்களில் சாலைகளில் குழுமிய மக்கள் இஸ்லாமிய மதகுருவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஈரான் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் சிலர் ஹிஜாபைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தியாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குக் கர்நாடக மாநில அரசு தடைவிதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் சிலர் வழக்காடிவருகின்றனர். இந்த நேரத்தில் ஹிஜாபைக் கட்டாயமாக அணிய வேண்டிய அரசு நிர்ப்பந்தத்துக்கு எதிராக ஈரானியப் பெண்கள் போராடத் தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. பத்து நாட்களுக்கு மேலாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் உட்பட இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபராக 2021 ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட இப்ராஹிம் ரயிசிக்கு இந்தப் போராட்டங்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. வழக்கம்போல் போராட்டக்காரர்களைத் ‘தேசத்துரோகிகள்’ என்று முத்திரை குத்தியிருக்கும் அரசு, போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஈரானின் ஆட்சி ஷியா மதத் தலைமையின் கட்டுப்பாடுக்குவந்த பிறகு, 1981இல் அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்பிறகு மதகுருக்களின் சர்வாதிகாரம் படிப்படியாக நிறுவப்பட்டது. மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோயின. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விதித்த தடைகளினால் விளைந்த பொருளாதாரச் சரிவுகளும் ஈரான் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. கடந்த கால் நூற்றாண்டில் 1997இல் முகமது காடமி, 2013இல் ஹசான் ரூஹானி ஆகிய இரண்டு சீர்திருத்தவாத அதிபர்களை ஈரான் மக்கள் தேர்ந்தெடுத்தாலும் மதத் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறி அவர்களால் எந்தச் சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இதற்கு முன் 2009இல் அதிபர் தேர்தல் முறைகேடுகளை முன்வைத்தும் 2019இல் கட்டுக்கடங்காமல் உயர்ந்த எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தும் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்திருந்தன. ஈரானிய அரசு மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதைக் காட்டிலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. மதம் சார்ந்த நெறிமுறைகளைத் திணிப்பதும் சரி, அதைப் பின்பற்றும் உரிமையை மறுப்பதும் சரி இரண்டுமே ஜனநாயகத்துக்கு எதிரானவை என்பதை மதகுருக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.