மெட்ரோ ரயில் - மத்திய அரசின் முதலீடு அதிகரிக்கட்டும்
நாட்டில் 1,000 கி.மீ.க்கும் மேற்பட்ட தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு பல முக்கிய நகரங்களில் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. சென்னை மெட்ரோவும் மத்திய - மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம் தான்.
இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சும் அளவுக்கு வேகமாக உயர்ந்துவருகிறது. இந்தப் பின்னணியில், மெட்ரோ ரயில் போன்ற விரைவான பொதுப் போக்குவரத்துத் திட்டம் இந்தியாவுக்கு அவசியமானது. பெருகிவரும் தனியார் வாகனப் புழக்கத்தைக் குறைப்பதற்கு இத்திட்டம் சரியான மாற்று. மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, இதன் தனிநபர் ஆற்றல் நுகர்வும் மிகக் குறைவு. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைகிறது. பல விதத்திலும் பயனுள்ள இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சவால்கள் உள்ளன.
ஒரு கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் 300 கோடி ரூபாய் செலவாகிறது. அந்த வகையில் அரசுக்குப் பெரும் செலவைத் தரும் திட்டம் இது. இதன் மறைமுகப் பாதிப்பு மக்களுக்கும் உண்டு. நிலம் கையகப்படுத்துதலும் சவாலானது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்திய நகரங்களில் அமைக்கப்பட்ட பெரும்பாலான மெட்ரோ சேவைகள் நஷ்டத்தில் ஓடுவதை 2020இல் வெளியான நிதிநிலை அறிக்கைகள் தெரிவித்தன. சென்னை மெட்ரோவுக்கு 714 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மூலதனத்துடன் ஒப்பிடும்போது, இந்த நஷ்டமும் மிகப் பெரிய சவால். ஒரு நகரத்தை மெட்ரோ தடத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாக முழுமையாக இணைக்கும் வரை இந்த நஷ்டம் தவிர்க்க முடியாதது.
மெட்ரோ ரயில் திட்டத்தால் நிலத்தின் சந்தை மதிப்பு உயர்வது வெள்ளிடை மலை. டெல்லி மெட்ரோ போக்குவரத்துத் தடப் பகுதிகளில் நிலமதிப்பு 15% முதல் 20% வரை உயர்ந்ததை இதற்கு ஆதரமாகக் கொள்ளலாம். நிலமதிப்பு உயர்வால் அரசின் வரிவருவாயும் உயர்கிறது. இந்த வருவாய், மெட்ரோ திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என வரி உயர்வு நிதியளிப்பு (TIF) முறைமை சொல்கிறது. இப்படி அளிக்கப்படும்போது மெட்ரோ மேம்பாட்டுக்கான நிதிச் சுமை குறையும் என்பதை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு மின்சக்தி முக்கியத் தேவை என்பதால் அவற்றுக்கு மானிய விலையில் மின்சாரம் அளிப்பதும் இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பெரிதும் ஊக்கமளிக்கும்.
இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதலீட்டின் பெரும் பகுதி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மெட்ரோ சேவை மாநிலப் பட்டியலுக்குள் வருவதால், இந்தத் திட்டத்துக்கான பன்னாட்டுக் கடனுக்கு மாநில அரசே பொறுப்பு. மத்திய அரசின் முதலீடு சிறு அளவில் இருக்கிறது. இந்தத் தொகையை மத்திய அரசு அதிகரித்தால், மாநில அரசின் கடன் சுமை குறையும். எதிர்காலத்துக்கான போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தை மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள இது வழிவகை செய்யும்.
