Published : 18 Nov 2016 09:08 AM
Last Updated : 18 Nov 2016 09:08 AM

நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு நல்ல தீர்ப்பு

ராவி, பியாஸ் நதிநீரைப் பக்கத்து மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பாகச் செய்து கொள்ளப் பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்தாவதாக 2004-ல் பஞ்சாப் மாநில சட்டப் பேரவை இயற்றிய சட்டம், சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி, முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

1981-ல் சட்லெஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் கட்டுவது தொடர்பாக ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களுடன் பஞ்சாப் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ததன் மூலம், தான் அளித்த உறுதிமொழிகளையே அம்மாநிலம் மீறியது. கால்வாய் கட்டும் வேலையை விரைவுபடுத்துமாறு 2004-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, தான் அளித்த உறுதிமொழியைக் கைவிடவே இந்தச் சட்டத்தை பஞ்சாப் சட்டப் பேரவை நிறைவேற்றியது.

ராவி, பியாஸ் நதிநீரைப் பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாட்டில் பஞ்சாபுக்கு உண்மையிலேயே சில மனக்குறைகள் இருக்கலாம். இதனால்தான் 1985-ல் ராஜீவ் - லோங்கோவால் இடையில் உடன்பாடு ஏற்பட்டபோது, நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சினையும் அதில் இடம்பெற்றிருந்தது. முதலில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் 1976-ல் மத்திய அரசின் அறிவிக்கையின் மூலமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. பிறகு, மீண்டும் அது வழக்காக மாறியபோது, பிரதமர் இந்திரா காந்தி 1981-ல் ஒரு உடன்பாடு காணவைத்து அதைத் தீர்த்து வைத்தார்.

நதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்சினைகளுக்குப் பக்கத்து மாநிலத்துடன் பேச்சு மூலம் தீர்வு காண்பதை விடுத்து, சட்டப் பேரவைத் தீர்மானம் அல்லது புதிய சட்டம் ஆகியவற்றின் மூலம் ஒரு தரப்பான தீர்வைத் திணிக்கப் பார்க்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் நமக்கு அக்கறை இல்லை என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்துவிடுகின்றன.

இந்நிலையில், நதிநீர்ப் பகிர்வு தொடர்பான வழக்கில், தண்ணீர் தர வேண்டிய மாநிலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தன்னுடைய சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி, நீதிமன்ற ஆணையோ, தீர்ப்போ செல்லாது என்றாக்கிவிட முடியாது என்று இத்தீர்ப்பு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே, இயற்றிய சட்டத்தில் ஓரிரு குறைகளைச் சீர்செய்வதற்கு அல்லது ஒரு தீர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் விஷயம் தொடர்பாகச் சட்டம் இயற்றுவது என்பது வேறு. நீதி வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் விதத்தில், ஒரு மாநிலம் தனது சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றுவது சட்டப்படியான ஆட்சி என்ற கொள்கையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் நாசப்படுத்திவிடும் என்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் அரசியல் சூழலுக்கேற்ப காய் நகர்த்தும் மத்திய அரசு, தன் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தீர்ப்பு இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x