

உலகளாவிய கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வரும் காலம் கண்ணுக்குத் தெரிவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இதற்கு வேறுவிதமாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, கரோனா வைரஸ் தொற்றைப் பருவகாலத் தொற்றுபோல் அணுகும் நிலைக்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்றும் உலகம் முழுவதும் பருவகால வரையறையின்றி இந்த நோய் பலருக்கும் பரவிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட பிறகு, கோவிட் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் மூத்த வைராலஜி நிபுணர் ககன்தீப் காங். புதிய வேற்றுருவால் மக்களுக்கு ஆங்காங்கே தொற்று ஏற்படும்போதும் அது தீவிரமடையவில்லை என்பது முக்கியமானது. தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மக்களிடையே நோய்த் தடுப்பாற்றல் அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார் ககன்தீப் காங். பெரும்பாலான நாடுகளில் இரண்டு தவணைகள் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதால் பூஸ்டர் ஊசியோ நான்காம் தவணை ஊசியோ தேவையில்லை என்பது அவரது வாதம். முதியவர்களும் தேவை உள்ளோரும் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை இந்த முன்னெச்சரிக்கை ஊசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்கிறார் அவர்.
ஏறத்தாழ நூறில் ஒருவருக்கு மட்டுமே நோய்த்தொற்று ஏற்படுவதாகச் சொல்லும் அவர், சி.எம்.சி. சார்பில் வேலூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றையும் அதற்குச் சான்றாக முன்வைக்கிறார். நோய்த்தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து எவ்வளவு பேருக்கு நோய் பரவுகிறது என்பதைக் கண்டறிவதே அந்த ஆய்வு. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களைக் குறிப்பிட்ட காலத்துக்குக் கண்காணித்ததில் நோய் பலருக்கும் பரவினாலும், தொற்றின் தீவிரம் மட்டுப்பட்டு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிய வேற்றுரு, அதன் தீவிரமான பரவல், மக்களின் உடல்நிலையில் அது ஏற்படுத்தும் தீவிரப் பாதிப்பு இவை மூன்றும் ஒருசேர நிகழ்ந்தால் மட்டுமே மீண்டுமொரு கரோனா அலை உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. சௌமியா சுவாமிநாதன் கூறுவதைப் போல் கோவிட் மேலும் தீவிரமடையக்கூடும் என்கிற அச்சம் இப்போது தேவைதானா என்கிற கேள்வியை மேற்சொன்ன ஆய்வு எழுப்புகிறது. இதற்கு வலுசேர்ப்பதுபோல், மார்ச் 2020 முதல் பதிவாகிவரும் கோவிட்-19 இறப்புகளில் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மிகக் குறைவாக இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது நம்பிக்கை அளிக்கும்விதமாக இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் தொற்று குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த நோயைக் கையாள்வதில் மருத்துவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர். நோய்ப் பரவலும் அதன் தீவிரமும் மட்டுப்பட்டிருக்கும் நிலையில், புதிய அலை குறித்த தேவையற்ற அச்சங்களை விடுத்து, மக்களிடையே பரவிவரும் இதர பருவகால நோய்களில் கவனத்தைச் செலுத்துவதே தற்போது அவசர, அவசியத் தேவை.