

கொலம்பிய அரசும் கொலம்பியப் புரட்சி ஆயுதப் படையும் (எஃப்.ஏ.ஆர்.சி.) புதிதாகச் செய்துகொள்ளத் தீர்மானித்திருக்கும் சமரச ஒப்பந்தத்துக்கு, அக்டோபரில், மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய ஒப்பந்தத்தின் கதியே ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன. இது மோசமான அறிகுறி.
அரசுக்கும் புரட்சிப் படையினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட, கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த அரை நூற்றாண்டில் 2.2 லட்சம் பேர் உயிரைக் குடித்து, 60 லட்சம் பேரை இடம்யெரச் செய்த விகாரம் இது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், வல்லரசு நாடுகளின் தலைவர்கள்கூட இப்பிரச்சினையில் தலையிட்டார்கள். அரசும் புரட்சிப் படையினரும் சமரசம் கண்ட பிறகு, அந்த ஒப்பந்தத்துக்கு மக்களின் ஆதரவு கேட்டுக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் இதை ஏற்கவில்லை. கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு தெரிந்த சில நாட்களுக்கெல்லாம், இந்தச் சமரச முயற்சிக்காக அதிபர் ஜுவான் மானுவல் சாண்டோஸுக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது. எத்தனையோ தடைகள் ஏற்பட்ட நிலையிலும், சமரசம் காண்பதில் அக்கறை உள்ளவர் என்று ஜுவான் பாராட்டப்படுகிறார். அதேசமயம், மீண்டும் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பு, அதிலும் மக்கள் இந்த சமரச உடன்பாட்டை ஆதரிக்கவில்லை என்றால், இப்போதைய முயற்சிகள் அனைத்துமே பயனற்றதாகிவிடும்.
கொலம்பியப் புரட்சி ஆயுதப் படையைச் சேர்ந்தவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமா என்பதே முக்கியமான கேள்வி. உடன்பாட்டில் அது ஒரு அம்சம். உலகின் எந்த ஒரு நாட்டிலும் புரட்சிப் படையினருடன் சமரசம் பேசினாலும் அவர்களை அரசியல் நீரோட்டத்துக்கு வர அனுமதிப்பது மரபு என்பதை ஜுவான் சுட்டிக்காட்டுகிறார். கொலை, கொள்ளை, ஆயுதமேந்தித் தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரைச் சட்டப்படி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், அரசியலில் ஈடுபட அனுமதிப்பது சட்டப்படியான ஆட்சி என்ற நடைமுறையை மீறும் செயல் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க புரட்சிப் படையினரிடம் உள்ள சொத்துகளைக் கணக்கெடுப்பது, போதை மருந்து கடத்தும் மாஃபியாக்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவது போன்ற நடவடிக்கைகளைக்கூடப் போதுமானவை என்று மக்கள் கருதவில்லை.
‘‘இந்த உடன்பாட்டை மக்கள் ஏற்கக் கூடாது’’ என்று முன்னாள் அதிபர் அல்வாரோ உரிபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாண்டோஸும் உரிபியும் முன்னாள் சகாக்கள். மக்களிடம் ஒப்பந்தத்தைக் கொண்டுசெல்லும் முன், அரசியல் அரங்கில் ஒரு சமரசத் தீர்வுச் சூழலை சாண்டோஸ் கொண்டுவருவது முக்கியம். முக்கியமாக, உரிபியுடன் அவர் பேச வேண்டும். நியாயமான சமரச உடன்பாடு காண இருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், அதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புகளை இருவரும் கருத்தில்கொள்ள வேண்டும். கொலம்பியாவின் எதிர்காலம் அமைதியில் இருக்கிறது. உலகம் வைத்த நம்பிக்கை வீண் போகக் கூடாது!