

நாட்டில் அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவை அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோலப் பதிவுசெய்யப்பட்ட 253 கட்சிகளைச் ‘செயல்படாத கட்சிகள்’ என்றும் அறிவித்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 537ஆக அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாதது மட்டுமின்றி, குறிப்பிட்ட முகவரியில் கட்சிகள் செயல்படவே இல்லை என்ற நிலையில், ஆணையம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சரியானதே.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் 6, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 54, பதிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2,796 என மொத்தம் 2,858 கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 2 சதவீதக் கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம், அங்கீகரிக்கப்படாத சிறு கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதுதான். 2011இல் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 1,112ஆக இருந்தது. 2021இல் இந்த எண்ணிக்கை 2,796ஆக அதிகரித்திருக்கிறது.
நாட்டில் சாதி, மதம், இனம், பிரிவு எனத் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடிய ‘அடையாள அரசியல்’ செய்யும் சிறு கட்சிகள் அல்லது ‘லெட்டர் பேட்’ கட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்குக் கடிவாளம் இடப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளும் பொதுவாக ஆண்டுதோறும் தேர்தல் ஆணையம் எதிர்நோக்கும் ஆண்டுவாரியான தணிக்கை ஆவணங்கள் தொடங்கி பங்களிப்பு அறிக்கை, தேர்தல் செலவின அறிக்கை, அலுவலக நிர்வாகிகள் விவரம், வங்கிக் கணக்கு உட்பட நிதி பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை அளிப்பது வரை ஆணையத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்கின்றன.
ஆனால், இதில் எதையும் பூர்த்திசெய்யாத, தேர்தலிலும் பங்கெடுக்காத ‘லெட்டர் பேட்’ கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுபோன்ற சூழலில் இக்கட்சிகளின் தரவுகளைத் தேர்தல் ஆணையம் பராமரிப்பதும் தேவையற்ற ஒன்று. வெறுமனே கட்சிப் பெயரை வைத்துக்கொண்டு வசூலில் ஈடுபடுவது, தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளை ஆதரிக்கும் சாக்கில் பலன்களை எதிர்பார்ப்பது எனப் பல சிறு கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 2018-19 நிதியாண்டில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 3.39 சதவீதம், அதாவது 78 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளன என்பதிலிருந்து ‘லெட்டர் பேட்’ கட்சிகள் மீது தேர்தல் ஆணையத்தின் பிடி இறுக வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அதேவேளையில், குறைந்த எண்ணிக்கையில் இயங்கக்கூடியவர்களின் கருத்து வெளிப்பாடு என்பது பல கட்சி ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அம்சம். எனவே, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சிறு கட்சிகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். மற்றொருபுறம் ‘லெட்டர் பேட்’ கட்சிகளை ஒழுங்குபடுத்துவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துவது காலத்தின் தேவை.