

அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில், மாநில மொழிகளின் முக்கியத்துவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடத்தக்க கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். தென்னிந்தியாவுக்கும் வடஇந்தியாவுக்குமான மொழி முரண்பாடு தீவிரமாகிவரும் இந்தக் காலகட்டத்தில், அமித் ஷாவின் இந்தப் பேச்சு வரவேற்கத்தக்கது. அந்த நிகழ்வில் அனைத்து மாநில மொழிகளும் வளர்ச்சிபெறுவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே மொழியுடன் தேசத்தை நகர்த்திச் சென்றுவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசியபோது, ‘இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டும்’ என்கிற கருத்தை அமித் ஷா வெளிப்படுத்தினார். இது சமூக ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளானது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதற்கான எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். தன் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகப் பிறகு அமித் ஷா தெரிவித்தார் என்பது கவனம்கொள்ளத்தக்கது.
2016 காலகட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்பதைத் தாண்டி, பாஜகவின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. தமிழ் மொழி குறித்த தருண் விஜய்யின் நாடாளுமன்ற உரைகளுக்குத் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது இந்தத் தமிழ்க் காதலுக்காக இரண்டு தமிழ் அமைப்புகள் அவருக்குப் பாராட்டுக் கூட்டங்களை நடத்தின. பிரதமர் மோடியும் பிற மாநிலக் கூட்டங்களில் பாரதியார், திருவள்ளுவரின் வரிகளைத் தன் உரைகளில் சிலமுறை மேற்கோள் காட்டியிருக்கிறார். சமீபத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ‘பாரதியார் பிரி’வையும் பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்.
மாநில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர், அந்தந்த மாநில மொழிகளின் சிறப்பு பற்றிக் கூறுவதற்கு மறப்பதில்லை. குஜராத், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் அடுத்தடுத்து வரவிருக்கும் நிலையில், மாநில மொழிகள் குறித்த மத்திய அரசின் மேற்கண்ட நிலைப்பாடு கவனத்துக்குரியதாகிறது. இந்தப் பின்னணியில் அமித் ஷாவின் முக்கியத்துவம் மிக்க மேற்கண்ட பேச்சை, மத்திய அரசு செயலாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழுமையாகத் துணைநிற்க வேண்டும். அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் கொள்கைரீதியில் மட்டுமில்லாமல், பொருளாதாரரீதியிலும் மத்திய அரசு நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண்டும்.
‘ஒரு மொழி இருந்தால் நாடு இரண்டாக ஆகும். இரண்டு மொழி இருந்தாலும் நாடு ஒன்றாக இருக்கும்’ என்ற இலங்கை இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி.சில்வாவின் புகழ்பெற்ற கூற்றுபோல் இந்தியாவின் பன்மொழிக் கொள்கைதான் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துமே தவிர, இந்தி மொழி என்ற ஒருமொழிக் கொள்கை பிரிவினை உணர்வையே அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.