

காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுக் கிறது. தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, கட்டுமானப் பணியின்போது வெளிப்படும் தூசு எனப் பல்வேறு காரணங்களால் பெருகும் காற்று மாசு, வட இந்தியாவில் இன்னொரு காரணத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அறுவடைக்குப் பிறகு வைக்கோல் உள்ளிட்ட வேளாண் கழிவுகளை எரிக்கும் பழக்கம் பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரையில் கங்கைச் சமவெளிப் பகுதி விவசாயிகளிடையே இன்னமும் உள்ளது. இதனால், 2.5 மைக்ரோ மீட்டர் அளவு உள்ள தூசித் துகள்கள் காற்றில் அதிகம் பறக்கின்றன. அவை, சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்று நோயை ஏற்படுத்துகின்றன. தலைநகர் டெல்லியில் மாசு அதிகமாகி மாநகரப் பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை, அடுத்த 10 நாட்களுக்கு டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கும், ஜெனரேட்டர்கள் பயன்படுத்தவும் தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநில அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன. நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்கும் சூழலில்கூட இன்னும் தேசிய அளவில் விவாதிக்கப்படும் ஒரு பிரச்சினையாகவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
எஞ்சும் வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் அடுத்த சாகுபடியைத் தொடங்க முடியாது என்ற காரணத்தால், அவற்றை விவசாயிகள் எரித்துவிடுகின்றனர். பல மாநிலங்களில் கால்நடைகளுக்குத் தீவனம் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், இப்படி வைக்கோல் எரிக்கப்படுவது வேதனையாக இருக்கிறது. வைக்கோல் தேவைப்படாதவர்களிடம் வாங்கி, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், இதற்குத் தீர்வு காண முடியும்.
வைக்கோல் போன்ற வேளாண் கழிவுகள் ஆண்டுக்கு 50 கோடி டன் அளவுக்குக் கிடைக்கின்றன என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் இந்தக் கழிவு எரிப்பில் முன்னிலை வகிக்கின்றன. நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோலில் 80%-ஐ எரித்துவிடுவது பல மாநிலங்களில் வழக்கமாக இருக்கிறது. ராஜஸ்தானில் வைக்கோலைப் பயன்படுத்தி உயிரி எரிபொருளைத் தயாரிக்க முடியும் என்று செய்துகாட்டியுள்ளனர். பஞ்சாப் அரசு வைக்கோலை எரிக்கக் கூடாது என்று தடை விதித்திருப்பதுடன், மின்சாரம் தயாரிக்க வைக்கோலை எரிபொருளாகப் பயன்படுத்தும் யோசனையையும் முன்மொழிந்திருக்கிறது. இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில் இயந்திரங்களின் உதவியுடன் வைக்கோல் போன்ற அறுவடைக்கு மிஞ்சும் தாவரக் கழிவுகளை மக்க வைக்கும் நடைமுறையை விளக்கியுள்ளனர். எனினும், இவையெல்லாம் மத்திய அரசு தீவிரமாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்காதவரை எந்தப் பலனையும் அளிக்கப்போவதில்லை.
பருவமழைக் காலம் முடிந்த பிறகும் பல நகரங்களில் காற்று மாசு அளவு, அனுமதிக்கப்பட்டதைவிடப் பல மடங்கு அதிகமாக இருப்பது கவலை தரும் விஷயம். காற்று மாசைக் குறைப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் இறப்புகளில் 10%-ஐக் குறைக்க முடியும். இதற்குக் கடுமையான நடவடிக்கைகள்தான் கைகொடுக்கும்!