‘ஃபுளூ’ காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்!

‘ஃபுளூ’ காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்!
Updated on
1 min read

தமிழ்நாடு பருவ மழைக் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் இன்ஃபுளூயன்சா (ஃபுளூ) எனப்படும் ஹெ1என்1 வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பது பெற்றோருக்குக் கவலை அளிப்பதாக உள்ளது.

பருவ மழைக் காலத்தில் குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், தீவிர சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள், முதியோர்களுக்கு இந்தக் காய்ச்சல் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கட்டமைப்பு உள்ள பெரும்பாலான இடங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் மொத்தமுள்ள 300 படுக்கைகளும் நிரம்பியதால், கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டுக் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வரும் சூழல் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தும். கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்படப் பல்வேறு இடங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஃபுளூ அறிகுறிகள், காய்ச்சல், சளி, தலைவலி உள்ள மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், யூனியன் பிரதேசமான புதுச்சேரியைப் போல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்குப் பதற்றமான சூழல் தமிழகத்தில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல், தொண்டைவலி, மூக்கடைப்பு, உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் ஃபுளூ காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆனால், கரோனா பெருந்தொற்றுக்குப் பின் உருவாகியுள்ள இந்த அசாதாரணச் சூழலில், எந்தவொரு அறிகுறியையும் எளிதாகக் கடந்துவிடக் கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதிசெய்து காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.

தீவிரக் காய்ச்சல் இருப்பவர்களுக்கு டெங்கு, கரோனா பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவத் தொடங்கும்போது, மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இரண்டு ஆண்டுகள் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டில் பரவத் தொடங்கியுள்ள இந்த ஃபுளூ காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்பு தீவிரமாக இருப்பதுதான் பிரச்சினை. இதற்காக மக்கள் பதற்றப்பட வேண்டியதில்லை. அதே நேரம், கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் கையாள்வதிலும் காட்டிய தீவிரத்தைத் தமிழ்நாடு அரசு, இதிலும் காட்ட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in