

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் பெரும் அதிருப்தியைத் தருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் மூத்த நிதிபதிகளும் அடங்கிய தேர்வுக் குழு (கொலீஜியம்) தயாரித்து அளித்த, நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டிய 77 பேர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைப் பரிசீலித்த மத்திய அரசு, அவர்களில் 43 பேரை நிராகரித்துவிட்டது. இந்த நீதிபதிகளின் பின்னணி, அனுபவம் உள்ளிட்ட இதர தகுதிகளைத் தேர்வுக்குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்புவதற்கான காரணத்தில் அரசு குறிப்பிட்டிருக்கிறது. 34 பேரின் பெயர்களை ஏற்று அவர்களை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதலும் வழங்கிவிட்டு, தன்னிடம் நிலுவையில் எந்தக் கோப்பும் இல்லை என்றும் நீதித் துறையிடம் தெரிவித்திருக்கிறது. இப்போது நீதிபதிகள் அடங்கிய தேர்வுக்குழு அரசு திருப்பியனுப்பியதற்கான காரணங்களைப் படித்துப் பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். “இதே பெயர்களே இருக்கட்டும், அவர்களையே நியமியுங்கள்” என்று குழு மீண்டும் பரிந்துரைத்தால் அதை ஏற்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. 43 பெயர்களை ஏற்க முடியாது என்று அரசு மறுத்திருப்பதால், அவர்களில் சிலரையாவது நீதிபதிகள் குழு மாற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பு. அப்படிப் பரிசீலனை செய்து பரிந்துரைக்க மேலும் அவகாசம் பிடிக்கும். நீதிபதிகள் நியமனத்துக்கு அரசுத் தரப்பில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, செல்லாது என்று அறிவித்ததால் இந்த மோதல்கள் தொடர்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
நீதிபதிப் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கும், தாங்கள் அனுப்பும் பட்டியலை ஏற்று ஒப்புதல் தராமல் காலம் கடத்துவதற்கும் காரணமாக இருக்கும் மத்திய அரசை விமர்சித்து, பொது இடங்களிலேயே பகிரங்கமாகப் பேசிவருகிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர். நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தாங்கள் ஆகஸ்ட் 3-ல் அனுப்பிய திருத்தப்பட்ட நியமன நடைமுறை ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தராமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழு தாமதப்படுத்துவது குறித்து அதிருப்தியுடன் இருக்கிறது அரசு.
இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு தாமதம். இந்திய நீதிமன்றங்களில் தேங்கும் கோடிக்கணக்கான வழக்குகளைத் தீர்க்கப் பலகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான நீதிபதிகள் நியமனப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பின் இடையே நிலவும் மோதல் தவிர்க்கப்பட வேண்டியது. புதிய தேர்வு நடைமுறை குறித்து இருதரப்பும் உடனடியாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுள்ள அம்சங்கள் குறித்து மனம் விட்டுப் பேசி, கருத்தொற்றுமை காண வேண்டும். மக்களின் இன்னல்களைப் போக்க வேண்டும்!