

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறார் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதியப்படும் பாலியல் குற்ற வழக்குகளைக் கண்காணிப்பதற்கான சிறப்புக் குழுக்களைத் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உருவாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. வழக்கு பதியப்படுவது, நீதிமன்ற விசாரணை, வழக்கு குறித்த தகவல்களைப் பாதிக்கப்பட்ட சிறார் - அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்தல், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய அனைத்தையும் இந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்கும்.
தென்மண்டல ஐஜியாகப் பொறுப்பேற்ற பிறகு, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குகளைப் பதிவு செய்வதைத் தாண்டி, குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபித்து உரிய நேரத்தில் தண்டனை பெற்றுத் தருவதையும் பாதிக்கப்பட்ட சிறாருக்கு மறுவாழ்வை உறுதி செய்வதையும் உள்ளடக்கிய முழுமையான பார்வையுடன் போக்சோ வழக்குகளைக் கையாளும் அணுகுமுறை மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறார் அஸ்ரா கார்க். இதற்காகவே அதிகாரிகள் சிலர் குழுவாக இணைந்து போக்சோ சட்டத்தையும் அதன் விதிகளையும் விரிவாகப் படித்துத் தெளிவடைந்திருக்கின்றனர்.
இவற்றின் பயனாகத் தென்மாவட்டங்களில் போக்சோ குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய காவல் நிலையத்துக்குச் செல்லும் பெற்றோர்/பாதுகாவலர் காவல் நிலையத்தில் மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் நடத்தப்படுவதோடு, பாதிக்கப்பட்ட சிறாரின் உரிமைகள், வழக்கு பதியப்படும்போது அவர்களிடம் விவரிக்கப்படும். முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறார் சிறப்பு நிவாரணங்களுக்கு உரியவர்களாக இருந்தால், அவற்றை உடனடியாகப் பெறச் செய்வதற்கான பணிகளைக் குழந்தைகள் நலக் குழுவால் தொடங்கிவிட முடியும். மேலும், பாதிக்கப்பட்ட சிறாரின் சூழ்நிலையைப் பொறுத்து வழக்கு விசாரணை முழுவதும் அவருக்குத் துணையாகக் குழந்தைகள் நலக் குழுவைச் சேர்ந்த ஒருவரைக் காவல் துறையின் மூலம் நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணை மனுவின் விசாரணையின்போது, அது குறித்துப் பாதிக்கப்பட்டவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்குக் கீழானவராக இருந்தால் அவருடைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் பிணை மனுவின் மீதான விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வந்து தமது தரப்பை விவரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போக்சோ வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களைப் புகாரளித்தவருக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போக்சோ சட்டங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு காவல் துறையின் தென்மண்டலப் பிரிவு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. குற்றவாளிகளைத் தண்டிப்பதைத் தாண்டி பாதிக்கப்பட்ட சிறார்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறை மாற்றம் காவல் துறையிடம் மட்டுமல்லாமல் அரசு, குடிமைச் சமூகம் என அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.