தலைமை வழக்கறிஞர்களுக்கும் வயது வரம்பு தேவை!

தலைமை வழக்கறிஞர்களுக்கும் வயது வரம்பு தேவை!
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரான முகுல் ரோஹத்கி, மீண்டும் ஒருமுறை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, அவர் ஜூன் 2014 முதல் ஜூன் 2017 வரையில் அந்தப் பொறுப்பை வகித்துள்ளார். தற்போது அட்டர்னி ஜெனரலாக உள்ள மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கடந்த ஜூன் மாதத்துடன் விலகிக்கொள்ள முடிவெடுத்தார். மூன்று மாத காலம் அப்பதவியில் தொடருமாறு மத்திய அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. அவரும் ஏற்றுக்கொண்டார். அதன்படி, செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவரது இடத்துக்கு உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹத்கி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மிக உயர்ந்த சட்ட அலுவலர் பொறுப்பான அட்டர்னி ஜெனரல் பணிக்கு ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்தவரை மறுமுறையும் நியமிக்கும் வழக்கம் சரியானதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகிக்கும் கே.கே.வேணுகோபால், 90 வயதைக் கடந்தவர் என்பது, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் நீண்ட காலமாகச் செலுத்திவரும் அபரிமிதமான செல்வாக்கின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவதற்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது. நீதியமைப்பின் சமநிலை என்பது நீதிபதிகளுக்கு இணையாக வழக்கறிஞர்களையும் நடத்தினால் மட்டுமே சாத்தியம். இந்திய அரசமைப்பு அந்த அடிப்படைத் தத்துவத்தைத் தழுவிக்கொண்டுள்ளது. அதே வேளையில், அட்டர்னி ஜெனரலின் பதவிக் காலம் குடியரசுத் தலைவரது விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு விரும்பும் வரைதான் அட்டர்னி ஜெனரல் தனது பதவியில் நீடிக்க முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசு, நீதிமன்றத்தில் தனது தரப்பை எடுத்துவைக்க மூத்த வழக்கறிஞர் ஒருவரைத் தம் விருப்பப்படி தலைமை வழக்கறிஞராக நியமித்துக்கொள்வதை இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வுபெறும் வயதைத் தீர்மானித்த அரசமைப்பு, அதே தகுதிகளோடு அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுபவர்களுக்கு ஓய்வுபெறும் வயதையோ பதவிக் காலத்தையோ தீர்மானிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இந்திய அரசமைப்பு அளித்துள்ள முக்கியத்துவம் என்று இதை நேர்மறையாகவும் கொள்ளலாம். ஆனால், தகுதியான பல மூத்த வழக்கறிஞர்கள் பணியாற்றும் உச்ச நீதிமன்றத்தில், குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அட்டர்னி ஜெனரலாக நீண்ட காலம் பணியாற்ற வாய்ப்பளிப்பது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகிக்கும், பதவி வகிக்கப்போகும் மூத்த வழக்கறிஞர்களின் தகுதிநிலைகளைப் பற்றியதல்ல இக்கேள்வி. தகுதியான மேலும் சிலருக்கு அந்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கக் கூடாதா என்பது மட்டும்தான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in