

பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறார். மணிபால் மருத்துவமனையில், இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நிலையில் காரிலிருந்து இறங்கி 3 கி.மீ தூரம் ஓடி மருத்துவமனையை அடைந்தார்.
அவர் சாலையில் வேகமாக ஓடிய காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டுவருகின்றன. மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய நேரம் குறிக்கப்பட்டிருந்த நிலையில், காலம் தாமதிக்காமல் ஓடிச் சென்று வெற்றிகரமாக அந்த அறுவைசிகிச்சையைச் செய்து முடித்திருக்கிறார். உயிர் காக்கும் கடவுளாகப் போற்றப்படும் மருத்துவர்கள், தங்களது பணியில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான முன்னுதாரணமாகிவிட்டார் கோவிந்த் நந்தகுமார்.
மருத்துவம் என்பது தொழில் அல்ல, சேவை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. கோவிந்த் நந்தகுமாரின் கடமை உணர்வைப் பாராட்டி, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளன. அத்தகைய விருதுகளும் பாராட்டுகளும் வெறும் அடையாள நிமித்தமாக அமைந்துவிடாமல், உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்.
மருத்துவர் ஒருவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் வேளையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூரு மாநகரம் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழக்கத்துக்கு மாறாகக் கொட்டித் தீர்த்த தென்மேற்குப் பருவமழையால், மாநகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. முக்கியச் சாலைகளில் இன்னும் போக்குவரத்து நெரிசல் சரியாகவில்லை. மாநகர வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும்போது எதிர்பாராத இத்தகைய மழை வெள்ளங்களையும் கணக்கில் கொண்டாக வேண்டிய கால நெருக்கடியில் இருக்கிறோம்.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக, எந்த ஒரு மாநகரமும் இந்தச் சூழலை எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்கொள்ள நேரலாம். எனவே, மாநகரப் பகுதிகள் அனைத்திலும் வெள்ளப் பேரிடர்களைச் சமாளிக்கும்வகையில் நிரந்தரமான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இயற்கைப் பேரிடர்களில் மட்டுமின்றி வழக்கமான நாட்களிலும்கூட மாநகரப் பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகின்றன. மாநகரப் பகுதிகளில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு இடத்தைச் சென்று சேர்வது என்பது சாத்தியம் இல்லாததாக மாறிவிட்டது.
மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்பட்டாலும்கூட சாலைவழிப் பயணம் என்பது போக்குவரத்து நெரிசலிலிருந்து முழுவதுமாக விடுபடவில்லை. அந்த நெரிசலுக்கு நடுவே நகர வாய்ப்பின்றி நிற்கும் அவசர ஊர்திகளில், மருத்துவ சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளும் இருக்கிறார்கள்.
மருத்துவர் கோவிந்த் நந்தகுமாரை நாடே பாராட்டும் இவ்வேளையில், மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறித்தும் எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முன்கூட்டியே ஆயத்தமாவது குறித்தும் அக்கறையும் விழிப்புணர்வும் உருவாக வேண்டும்.