

பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பிஹார் முதல்வராக ஆட்சியைத் தொடரும் நிதீஷ் குமாரின் ஒவ்வொரு நகர்வும் தேசிய அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து நின்றால், பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய நிதீஷ் குமார், அந்தப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
பிஹாரில் கூட்டணி மாற்றத்துக்கு வித்திட்ட லாலு பிரசாத் யாதவ் வாழ்த்துகளோடு கடந்த வாரம் புது டெல்லி புறப்பட்ட நிதீஷ் குமார், அங்கு ராகுல் காந்தியுடன் தற்போதைய அரசியல் சூழல்களைப் பற்றியும் வாய்ப்புள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் பெருங்கூட்டணியில் இணைப்பதைப் பற்றியும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் நிதீஷ் குமார். ஹரியாணாவின் முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் ஆகியோருடனான சந்திப்புகளும் அவரது டெல்லி பயணத்தில் குறிப்பிடத்தக்கன.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே தற்போதைய செயல்திட்டம், குறைந்தபட்சப் பொது வேலைத் திட்டத்துக்குப் பின்னரே கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவாகும் என்று தெரிவித்துள்ளார் யெச்சூரி. பெருங்கூட்டணியில் தாமும் ஒரு அங்கம் என்று சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் திரிணமூலும் இடதுசாரிகளும் விரைவில் ஒரே மேடையில் ஏறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதுவே, நிதீஷ் குமாரின் அரசியல் வியூகத்துக்குக் கிடைத்த முதல் வெற்றிதான்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசியுள்ளார் நிதீஷ் குமார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கப்படுபவரில் அவரும் ஒருவர். பிரதமர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று நிதீஷ் குமார் தெரிவித்துவிட்ட நிலையில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் குறித்தும் அக்கட்சி அதுபோன்ற கருத்தையே தெரிவித்துள்ளது.
மற்றொரு போட்டியாளராக எதிர்பார்க்கப்படும் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ், பிஹாருக்கே நேரடியாகச் சென்று நிதீஷ் குமாரைச் சந்தித்துள்ளார். இதற்கிடையில், தேசியக் கட்சியைத் தொடங்குவதற்கான ஆயத்தத்திலும் கேசிஆர் இறங்கியுள்ளார்.
விரைவில், சோனியா காந்தியை நிதீஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் இணைந்து சந்திக்கவிருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, தனது நடைப்பயணத்தை இந்தியாவின் தென்முனையிலிருந்து தொடங்கி நடத்திக்கொண்டிருக்கையில் நிதீஷ் குமார், எதிர்க்கட்சித் தலைவர்களை நேரடியாகச் சந்தித்துத் தனது தேர்ந்த அரசியல் நகர்வுகளைத் தொடங்கிவிட்டிருக்கிறார்.