ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரம்: பெருமிதமும் சவால்களும்!

ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரம்: பெருமிதமும் சவால்களும்!
Updated on
1 min read

குஜராத்தின் சூரத் நகரில், அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பது சாதாரணமான சாதனை அல்ல என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிவரும் தருணத்தில், இச்சாதனை மேலும் தீவிரமாக உழைக்கவும் இன்னும் பெரிய இலக்குகளை அடைவதற்குமான நம்பிக்கையை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலனியத்தின் படுமோசமான சுரண்டலுக்கு ஆளான நாடு இந்தியா. நாட்டில் சரிபாதிக்கும் மேலானோர் இன்னும் விவசாயத்தையே பிரதான வருமானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சர்வதேசப் பண நிதியத்தின்(ஐஎம்எஃப்) மதிப்பீடுகளின்படி, பத்தாண்டுகளுக்கு முன்பு 11ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஐந்தாவது இடத்திலிருந்த பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தற்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை அடுத்து ஐந்தாவது இடத்தில் தற்போது இந்தியா உள்ளது.

வளர்ந்த நாடுகள் பலவும் காலனியாதிக்கக் கொள்கையைப் பின்பற்றி அதனால் மிதமிஞ்சிய பலன்களைப் பெற்றவை. அரசியல் ஸ்திரத்தன்மைக்காக ஒரு கட்சி அரசமைப்பையோ இரு கட்சி அரசமைப்பையோ விடாது பின்பற்றிவருபவை.

அந்நாடுகளுடன் ஒப்பிடும்போது, பொருளாதார நிலையில் இந்தியா எட்டியிருக்கும் வளர்ச்சியானது அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி அரசமைப்பின் துணையோடு எட்டப்பட்டுள்ளது என்பது இந்தியாவின் மக்களாட்சி முறைக்கு மேலும் பெருமை சேர்ப்பது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.

வாங்கும் சக்தியின் அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியா மூன்றாவது இடத்திலிருக்கும். இந்தியாவின் பொருளாதார இலக்குகள் உரிய காலத்திலோ அதற்கு முன்னதாகவோ எட்டப்பட்டால், அமெரிக்காவை இந்தியா விஞ்சுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.

ஐஎம்எஃப் வெளியிட்ட சமீபத்திய மதிப்பீடுகள், நாணய மாற்று மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவை. எனினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிரிட்டனை நிரந்தரமாகவே பின்னுக்குத் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பிரிட்டனின் பொருளாதாரம் 3.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இந்தியப் பொருளாதாரம் 3.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மக்கள்தொகை வேறுபாடு.

மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து சராசரியாகத் தனிநபர் உற்பத்தியைக் கணக்கிட்டால், இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2,500 அமெரிக்க டாலராகவும் அதுவே பிரிட்டனில் 47,000 அமெரிக்க டாலராகவும் உள்ளது.

மக்கள்தொகையில் பிரிட்டனைக் காட்டிலும் இந்தியா 20 மடங்கு அதிகமாக உள்ள நிலையில், அனைவரையும் சமச்சீரான வளர்ச்சியை எட்டச் செய்வதே இந்தியாவின் முன்னிற்கும் சவால். அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளில் அதுவும் ஒன்றாக இருக்கட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in