

ஐந்து நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிரிக்ஸ் மாநாடு, ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிம்ஸ்டெக் மாநாடு என்று இரண்டு முக்கிய மாநாடுகளை இரண்டு நாட்களில் நடத்தியிருக்கிறது இந்தியா. ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு புவியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ‘பிரிக்ஸ்’ அமைப்பு பொருளாதார நோக்கங்களைப் பிரதானமாகக் கொண்டது. ‘பிரிக்ஸ்’ அமைப்பின் நோக்கங்கள் தற்போது வலுவிழந்திருந்தாலும், உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதிலும், காலத்துக்கு உதவாத நடைமுறைகளை எதிர்ப்பதிலும் இந்த அமைப்பிடம் இருக்கும் திறன் அபாரமானது. ஏனெனில், இதில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் தத்தமது பிராந்தியத்தில் தலைமைப் பண்புடன் திகழ்பவை. நிதி அமைப்புகள், வளர்ச்சித் திட்டங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை தொடர்பாக இந்நாடுகள் தெரிவிக்கும் கருத்துகள் உலகளாவிய அளவில் தாக்கம் செலுத்தக் கூடியவை.
ஆக, இந்தியா முக்கியப் பங்காற்றும் இரு அமைப்புகளின் மாநாடுகள் நமக்குப் பல வகைகளில் முக்கியமானவை. ஆனால், இந்த முறை பயங்கரவாதம் எனும் ஒற்றைப் பிரச்சினையே நம்முடைய பெரும்பாலான கவனத்தையும் ஆக்கிரமித்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. உரி தாக்குதலுக்கு முன்னதாகவே, ராஜீயரீதியாக பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கிவிட்டது. தொடர்ந்து, சீனாவில் நடந்த ஜி-20 மாநாடு, லாவோஸில் நடந்த ஆசியான் மாநாடு, ஐநா பொதுச் சபைக் கூட்டம், வெனிசுலாவில் நடந்த அணிசாரா இயக்க மாநாடு என்று பல்வேறு தருணங்களில், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இந்தியாவின் சீற்றம் வெளிப்பட்டது. இவற்றின் மூலம் ஏற்கெனவே போதுமான பலன் கிடைத்திருக்கிறது. இச்சூழலில், பொருளாதார வளர்ச்சி, பிராந்தியத்தில் வளம் சேர்க்கும் நடவடிக்கைகள் என்று முன்பு தான் அறிவித்த இலக்குகளில் இந்தியாவின் கவனம் சென்றிருக்க வேண்டும்.
உலகளாவிய வளங்களைச் சரிசமமாகப் பங்கிடுவது, பிரிக்ஸ் அமைப்பு தொடங்கிய ‘புதிய வளர்ச்சி வங்கி’யைப் பயன்படுத்திக்கொள்வது, பருவநிலை மாற்றம் ஆகியவை தொடர்பாக பணக்கார நாடுகளுக்கு ஒருங்கிணைந்த செய்தியைத் தெரிவிப்பதுதான் முன்னதாக இந்தியாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் இடம்பெற்ற விவாதங்களின் முடிவுகள் தொடர்பாகப் பேசிய பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கே அதிக முக்கியத்துவம் தந்தார். விளைவாக, ஏனைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டோம். கடைசியில், நாம் கவனம் கொடுத்த அத்தனை விஷயமும் சீனாவின் தலையீடு காரணமாக மாநாட்டுப் பிரகடனத்தில் முழுமையாக இடம்பெறவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், நஷ்டம் யாருக்கு? உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசின் முழுக் கவனமும் பாகிஸ்தானை மையமிட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இந்தியாவுக்கு அதைத் தாண்டியும் நிறையப் பிரச்சினைகள், இலக்குகள் இருக்கின்றன!