

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, எல்லோருக்கும் சமமான வாய்ப்பை அளிக்க வேண்டியதாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகத் தமிழக அரசுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தமிழக அரசு தயாரான விதம் ஆரம்பத்திலேயே கேள்விக்குள்ளானது. மேயர், நகர்மன்றத் தலைவர் போன்ற பதவிகளுக்கான நேரடித் தேர்தல் முறையை ரத்துசெய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் கொண்டுவந்தது, உள்ளாட்சிப் பதவிகளுக்கான இனச்சுழற்சி முறையை முன்கூட்டியே அறிவிக்காதது போன்ற அரசின் முடிவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. இந்நிலையில், செப்டம்பர் 26 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அதற்கு முந்தைய நாள் இரவு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அடுத்த சில மணி நேரங்களில் ஆளும் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதனால், உள்ளாட்சிப் பதவிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டுப் பட்டியலை ஆளுங்கட்சி யினர் முன்கூட்டியே பெற்று, அதனடிப்படையில் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதாவது, ஆளும்கட்சிக்கு மட்டுமே தேர்தலைச் சந்திப்பதற் கான அவகாசத்தை இந்தத் தேர்தல் அறிவிப்பு அளித்ததாக எல்லோரும் சொன்னார்கள். தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு உரிய வகையில் இந்தத் தேர்தலில் நடக்கவில்லை என்று கூறி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார் ஆர்.எஸ்.பாரதி.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்துசெய்தது. மேலும், “மாநிலத் தேர்தல் ஆணையம் தேவையற்ற அவசரத்தைக் காட்டியுள்ளதோடு, அதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் மற்ற அரசியல் கட்சிகளுக்கு இடையூறு செய்துள்ளது. இது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, வாக்காளர் களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவே இருக்கிறது” என்றும் குறிப்பிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை கோரிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பித்து, டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தும் கட்டாயம் மாநில அரசுக்கு இப்போது உருவாகியிருக்கிறது.
சாமானியர்களுக்கு அதிகாரம் அளிப்பவை உள்ளாட்சித் தேர்தல்கள். தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும், அவர்களால் முயன்ற அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல்களை வளைக்கும் போக்கு சமீப காலத்தில் உருவாகிவிட்டது. நாளாக நாளாக நிலைமை மேலும் மோசமாகிறது. மக்களுக்கான தேர்தலைத் தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க முற்படும் போக்குக்குத்தான் இப்போது நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் அவகாசம் நேர்மையான, குறைகளற்ற தேர்தலை நடத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் இதை நியாயமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!