

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவரும் நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முதன்மை அமர்வு அளித்துள்ள தீர்ப்பு போட்டித் தேர்வர்களின் நெடுநாள் கோரிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பொதுப் பிரிவிலும் சமூக அடிப்படையிலான இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகாத நிலையில் மட்டுமே பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
அதுவும், பெண்களுக்கு எத்தனை இடங்கள் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு மட்டுமே அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இத்தீர்ப்பானது, ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களைப் பாதிக்காது.
எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள், முடிவுகளுக்காகக் காத்திருக்கும் தேர்வுகள் ஆகியவற்றில் இத்தீர்ப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் சந்தேகமும் போட்டித் தேர்வர்களிடையே எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைப் பின்பற்றி, உயர் நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பைக் குறித்து தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது கருத்தைத் தெரிவிப்பதே மாணவர்களுக்குத் தெளிவை அளிக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, பெருந்தொற்றின் காரணமாகத் தேர்வாணையத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்துத் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருவது போட்டித் தேர்வர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஊறு ஏற்படுத்தாதவண்ணம், அரசு முடிவுகள் தெளிவுபட அறிவிக்கப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு, பதவி உயர்வுக்குப் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசுப் பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற சூழலில் மட்டுமே, பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனை.
துறைவாரியாக இடஒதுக்கீட்டுப் பிரிவினர் பெற்றிருக்கும் பிரதிநிதித்துவம் குறித்த ஆய்வறிக்கைகள் மட்டுமே பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதற்கு நியாயமும் வலுவும் சேர்க்கும். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 3.5% உள் இடஒதுக்கீட்டைப் பெற்றுவரும் முஸ்லிம்கள் அதன் வாயிலாக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சேரும் வாய்ப்புகளைப் பெற்றாலும், அரசுப் பணிகளில் தங்களது விகிதாச்சாரம் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
தற்போதைய உள் இடஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே அவர்களுக்குப் பலனளிக்கிறதா என்று பரிசீலிக்க வேண்டிய தேவையும் உள்ளது. தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது சமூகநீதியாளர்களின் முக்கியப் பரிந்துரையாக இருக்கிறது.
அதே வேளையில், அரசுப் பணியாளர்களை நிரந்தர நியமன முறைக்கு மாறாக, அயல்பணி ஒப்படைப்பு முறையில் (அவுட்சோர்ஸிங்) பணியமர்த்தும் போக்கு அதிகரித்துவருகிறது. அரசின் பணி அது எத்தன்மையாயினும், எல்லா நிலைகளிலும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவதே சமூகநீதிக் கொள்கைக்கான உண்மையான அர்த்தத்தை அளிக்கும்.