

குஜராத், ஹரியாணாவைத் தொடர்ந்து இப்போது மகாராஷ்டிரம் தன் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. இடஒதுக்கீடு ஆயுதத்தைக் கையில் எடுத்து நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் மராத்தாக்கள்.
அஹம்மது நகர் மாவட்டத்தில் 14 வயது மராத்தா சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இந்தப் பேரணிகளுக்கான தொடக்கப்புள்ளி. இந்த வழக்கில் இதுவரை மூன்று தலித்துகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் என்று தொடங்கியது பேரணி. சில நூறு பேர் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்ட பேரணியில், பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். முக்கியமான விஷயம், பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களில் பரவின மராத்தாக்களின் பேரணிகள்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதி கோரும் பயணமாகத் தொடங்கிய பேரணி, இப்போது மேலதிகம் இரு கோரிக்கைகளை முன்வைக்கிறது. 1. இதர பிற்படுத்தப்பட்டோர்கள் பிரிவில், மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் - 1989ஐ ரத்துசெய்ய வேண்டும். முதலாவது கோரிக்கை, நீண்ட காலமாக அவர்கள் பேசுவது. இரண்டாவது கோரிக்கை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நாடு முழுவதும் இப்போது வளர்த்தெடுக்கப்பட்டுவரும் வெறுப்பின் தொடர்ச்சி.
விவசாயத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சி, நிலவுடைமைச் சமூகங்களிடம் வேலைவாய்ப்பின்மையையும் வறுமையையும் உருவாக்கிவருவதை உணர முடிகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான தார்மிக நியாயத்தை நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பொருளாதாரரீதியிலான பின்னடைவு மட்டும் அல்ல; சமூகரீதியிலான அநீதியையும் எதிர்கொண்ட சமூகங்களே இடஒதுக்கீட்டுக்கான நியாயத்தைப் பெறுகின்றன. பல வழக்குகளில் இந்த விஷயத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. காலங்காலமாக ‘உயர் சாதியினர்’அந்தஸ்தில் தங்களை வைத்துக்கொண்டிருக்கும் மராத்தாக்கள், மகாராஷ்டிரத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மையங்களில் முக்கிய இடத்தில் இருப்பவர்கள். மகாராஷ்டிர மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தாக்களே அரசியலைத் தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம், 2012 காலகட்டம் வரையிலான 16 முதல்வர்களில் 10 பேர் மராத்தாக்கள் என்பது. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் எழும் இந்தக் கோரிக்கைகள் குறுகிய கால லாபக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு கவனத்தோடு அணுக வேண்டியவை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறையைத் தடுக்க ஒரே பாதுகாப்புக் கவசமாக இருப்பது இன்றைக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். உண்மையில், இந்தச் சட்டத்தைச் சிறப்பாக அமலாக்க வேண்டும். அதை ரத்துசெய்தல் கூடாது.
நிலவுடைமைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி புரிந்துகொள்ளக் கூடியது. கிராமப்புறப் பொருளாதாரத்தின் எழுச்சிதான் அவர்களின் மீட்சிக்கு உதவும். அரசின் கவனத்தைக் கிராமங்களை நோக்கித் திருப்ப அவர்கள் முயல வேண்டும். சக சகோதரர்கள் மீது வெறுப்பை விதைப்பதில் பயனில்லை!