

இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையிலிருந்து ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என்ற நாடு தழுவிய நடைப் பயணத்தை இன்று தொடங்கவிருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்தப் பயணம், 12 மாநிலங்களையும் 2 யூனியன் பிரதேசங்களையும் கடந்து ஜம்முவில் நிறைவடைய உள்ளது.
ஒரு நாளைக்கு 22-23 கிமீ என்ற அளவில் 150 நாட்களில் மொத்தம் 3,750 கிமீ நீளத்துக்கு இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள், அமைப்புகள், ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் இந்த நடைப் பயணம் ஒருங்கிணைப்பதோடு, பலவீனமான நிலையிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய ஒரு யாத்திரையை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கையில், காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. அப்போட்டியில் ராகுல் காந்தி கலந்துகொள்வாரா இல்லை, கட்சி ஜனநாயகத்துக்கு வாய்ப்பளித்து விலகி நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில், காங்கிரஸிலிருந்து வெளியேறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். காங்கிரஸ் கட்சி களத்தில் செயல்படவில்லை என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டு.
காங்கிரஸில் முழு நேரத் தலைவருக்கான அவசியம் குறித்து இரண்டாண்டுகளாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்திவருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையும் தோல்வியடைந்ததையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு, ஒரு வலுவான தலைமை இல்லாமல்தான் அக்கட்சி இயங்கிவருகிறது.
உலகளவில் பெரும் மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டில், எதிர்க்கட்சி பலவீனமாக இருப்பது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று அரசியல் விமர்சகர்களும்கூடத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகின்றனர். இந்நிலையில்தான், காங்கிரஸின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அக்கட்சியின் தலைமைச் செயற்குழு, அக்டோபர் 17 அன்று கட்சித் தலைவர் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 22-ல் கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்களிடமிருந்து எழுந்துள்ளது.
வெளிப்படையான வாக்காளர் பட்டியலுக்கான அவர்களது கோரிக்கை, கட்சித் தலைவர் போட்டியில் அவர்களில் சிலர் போட்டியிடுவதற்கான விருப்பத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. அவர்களுக்கு இடையிலான சந்திப்புகளும் அதே கோணத்தோடு பார்க்கப்படுகின்றன.
என்றாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே, யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்ற விவரங்கள் தெளிவாகும். வெளிப்படையான ஒரு தேர்தலின் மூலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்கட்சி நேரு குடும்பத்தின் மீதான விசுவாச மனப்போக்கிலிருந்து ஓரளவு விடுபட்டு, உட்கட்சி ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இத்தேர்தலிலிருந்து, நேரு குடும்பத்தினர் ஒருவேளை விலகி நின்றாலும், கட்சியின் மீதான அக்குடும்பத்தின் செல்வாக்கு என்றைக்கும் குறைந்துவிடப் போவதுமில்லை.