

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் 13 பில்லியன் ஈரோ அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம், ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு அல்லது ஒரு நாடுகளின் ஒன்றியம் சார்ந்த பிரச்சினை அல்ல. மாறாக, சர்வதேசம் எதிர்கொள்ளவிருக்கும் முக்கியமான தொழில்சார் விவகாரம் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது.
எந்த ஒரு துறையிலும் ஏகபோக நிறுவன ஆதிக்கம் உருவாகிவிடாமல் தடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் நிறுவிய கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையரே இப்படி ஒரு அபராதத்தை ‘ஆப்பிள்’ மீது விதித்தார். இந்த விவகாரத்தில், அயர்லாந்து நாட்டின் மிகக் குறைவான வரிவிதிப்புக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி தொடர்பான கொள்கையை மீறியிருப்பதையும் ஆணையர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அயர்லாந்து பொதுவாக, பெருநிறுவனங்களுக்கு 12.5% வரி விதிக்கிறது. இதை ஆணையம் பிரச்சினையாக்கவில்லை. ஆனால், ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அது ‘அதிகபட்சம் 1% வரி கட்டினால் போதும்’ என்று கூடுதல் சலுகை அளித்திருந்தது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, வெறும் 0.005 % வரியை மட்டுமே கட்டிவந்திருக்கிறது ‘ஆப்பிள்’ நிறுவனம். இதன் மீதுதான் கை வைத்திருக்கிறார் ஆணையர்.
இப்போது ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையானது, அயர்லாந்து, ஓராண்டில் தனது மக்களின் ஆரோக்கியத்துக்காகச் செலவழிக்கிற தொகைக்கு இணையான தொகை. ஆனால், அயர்லாந்து இந்தத் தீர்ப்பைக் கொண்டாடவில்லை. மாறாக தீர்ப்பை எதிர்த்து, ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறது. இதற்குக் காரணம், அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. அயர்லாந்தின் மிகக் குறை வான வரிவிதிப்புக் கொள்கையும் அதன் நேரடி அந்நிய மூலதனம் தொடர்பான கொள்கைகளுமே பன்னாட்டு நிறுவனங்கள் அயர்லாந்தை வட்டமிடக் காரணம். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்நடவடிக்கை, தன்னுடைய முதலீட்டாளர்களை வெளியேற்றிவிடும் என்று அயர்லாந்து நினைக்கிறது. இதனால், பெரும் வேலையிழப்பு ஏற்படும், பொருளாதாரம் முடங்கும் என்றுகூட அது அஞ்சுகிறது.
அமெரிக்க அரசியல்வாதிகள் இந்த அபராத விதிப்பினால் அதிர்ந்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு அமெரிக்கா 35% வரி விதிக்கிறது. அயர்லாந்தோ 12.5% மட்டுமே விதிக்கிறது. 2014-ல் பெருநிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்க நிறுவனங்கள் பல வரிகளிலிருந்து தப்பிக்க, தலைமை யகங்களை மற்ற நாடுகளுக்கு மாற்றிக்கொண்டன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இது எதிரொலிக்கும் சூழலில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இது எதிரொலிக்கிறது. அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரியும் ட்ரம்பும் பெருநிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பது தொடர்பாகப் பேசிவருகின்றனர்.
லாப வேட்டை நோக்கில், பெருநிறுவனங்கள் இப்படி நாடு விட்டு நாடு பாய்வது கவலைக்குரிய பிரச்சினை. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது கூடுதல் கவலையளிக்கும் விவகாரமும்கூட. எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?