

தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் படிப்புகளிலும் இரண்டாம் பருவத்திலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவினை உயர் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது.
பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விக்கும் தமிழ் மொழிப் பாடத்துக்கும் தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு 20% உள் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுவருகிறது. பள்ளிக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை தமிழ்வழியிலேயே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
மேலும், அரசுப் பணிக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும், தமிழ் மொழியில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களிலும் அவற்றோடு இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இளங்கலைப் படிப்புகளில் முதலாவது பருவத்தில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டுவருகிறது என்றபோதும் இரண்டாம் பருவத்தில் சில பல்கலைக்கழகங்கள் அவற்றைத் தவிர்க்கின்றன. உயர் கல்வித் துறை முதன்மைச் செயலரின் சமீபத்திய உத்தரவு முதலாண்டு முழுவதும் தமிழ் ஒரு பாடமாகத் தொடர்வதற்கு வழியமைத்துள்ளது.
அதே நேரத்தில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளைப் போலவே மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வியியல் என்று தொழிற்கல்விப் படிப்புகளிலும்கூட தமிழ் மொழி ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட தொழிற்கல்வியோடு தொடர்புடைய வகையில் பாடத்திட்டத்தை வடிவமைப்பதன் வாயிலாக, உயர் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்கலாம். தற்போது கல்லூரிகளின் இளநிலைப் படிப்புகளில் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இடம்பெற்றிருந்தாலும் மற்ற பாடங்களுக்கும் அதற்கும் இடையிலான பிணைப்பு இன்னும் உருவாகவில்லை என்பதே உண்மை.
மருத்துவம், பொறியியல் படிக்கிற மாணவர்களுக்கு, தமிழில் எழுதப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட துறைசார்ந்த நூல்களை மொழிப்பாடமாக வைக்கலாம். பிற மாநில மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்களிக்கலாம். தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்திட அரசியல் தளத்தில் தீவிர விவாதங்கள் நடந்துவருகின்றன என்றபோதும் அரசு சட்டக் கல்லூரிகளில் தமிழ் இன்னும் மொழிப்பாடமாகவில்லை.
தமிழ்வழிக் கல்வியோடு தமிழ்மொழிப் பாடமும் சட்டத் தமிழுக்கு வளம்சேர்க்கக் கூடும். பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக த.உதயச்சந்திரன் பொறுப்பு வகித்தபோது தயாரிக்கப்பட்ட தமிழ்மொழிப் பாடநூல்கள் செய்யுள், உரைநடை, இலக்கணம் என்பதாக முடிந்துவிடாமல் மாணவர்கள் கற்கும் மற்ற பாடங்களுடன் துறைவாரியாகப் பிணைக்கப்பட்டிருந்தது. கல்லூரிகளின் மொழிப் பாடங்களுக்கும் அத்தகைய பல்துறை சார்ந்த பார்வை தேவை.