

தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அண்மையில் வெளியிட்டிருக்கும் 2021-க்கான ஆண்டறிக்கையின்படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சுமார் 40% அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. என்சிஆர்பி ஆண்டறிக்கைகள், பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே தயாராகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரையில், பாதிப்புக்கு ஆளானவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நாடுவதற்குத் தயக்கம் காட்டும் நிலை இன்னமும்கூடத் தொடரும்நிலையில், கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை என்பது ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 2021இல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 6,604 பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெண் குழந்தைகளே அதிகம். 2020இல் இந்த எண்ணிக்கை 4,338 ஆக இருந்தது. 2021இல் பதிவானவற்றில் 4,465 வழக்குகள் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012இன் (போக்சோ) கீழ் பதிவாகியுள்ளன. 69 குழந்தைகள் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 3 பேர் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதற்கு உடந்தையாக இருத்தல், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர், இணையக் குற்றங்கள், கொலைமுயற்சி, காயப்படுத்துதல் என்று பல்வேறு நிலைகளில் இக்குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை பெருநகரத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021இல் மொத்தம் 546 பதிவாகியுள்ளன. அவற்றில், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவானவை, 435 வழக்குகள்.
குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் மாவட்ட நிர்வாகங்களும் கடத்தப்பட்ட குழந்தைகளை உடனடியாக மீட்பதில் காவல் துறையும் விரைந்து செயல்படுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அரசு சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றபோதும், பெருந்தொற்றுக்குப் பிறகு குழந்தைகள் இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படுவதும் பலியாவதும் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் போலவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலும் பாதிக்கப்பட்டவரையே குற்றத்துக்குக் காரணமாகச் சித்தரிக்கும் பொது மனநிலை ஒன்றும் நிலவுவது ஆபத்தானது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதுவே ஆதரவாகவும் அமைந்துவிடுகிறது.
குற்றச் செயல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான விழிப்புணர்வைக் குழந்தைகளிடம் பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் வழங்குவது குறைந்தபட்சப் பாதுகாப்புக்கு வழிவகுக்கும். இவ்விஷயத்தில், பள்ளிக் கல்வித் துறைக்கும் பெரும்பங்கு இருக்கிறது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பதிலும் வழக்கு விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்கள் அவர்களுக்கு எந்த வகையிலும் சாதகமாகிவிடக் கூடாது என்பதிலும் நீதித் துறை உரிய கவனத்தை அளிக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்துத் தண்டனை அளிக்கும் விகிதத்தில் இந்திய அளவில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களே முன்னிலை வகிக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.
எனினும், விசாரணை நடவடிக்கைகள் குறித்த அச்சம், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கின்றன. அந்தத் தயக்கங்களும் முழுமையாகக் களையப்பட வேண்டும்.