

நடப்பு 2022-23ம் நிதியாண்டின் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி), வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 13.5% ஆக அதிகரித்திருப்பது பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கையளிக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் 20.1% ஆக இருந்தது. எனினும், அப்போதைய வளர்ச்சி ரூ.32.46 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருந்தது. தற்போதைய வளர்ச்சி ரூ.36.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் அதாவது, 2022 ஜனவரி தொடங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி விகிதம் 4.1% ஆகச் சரிந்திருந்த நிலையில், இரட்டை இலக்கத்தில் அடியெடுத்து வைத்திருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
நடப்பு 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.4% ஆக அதிகரிக்கும் என்று பன்னாட்டு பண நிதியம்(ஐஎம்எஃப்) ஏற்கெனவே மதிப்பிட்டுள்ள நிலையில், அதற்கான உறுதியான வாய்ப்புகள் இருப்பதையே தற்போது தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் காலாண்டு அறிக்கையும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில், குறிப்பிட்ட இந்தக் காலாண்டின் வளர்ச்சி விகிதம் 16.2% ஆக அதிகரிக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பைக் காட்டிலும் இது சற்றுக் குறைவுதான். எது எப்படியிருப்பினும், பெருந்தொற்றுக்கு முந்தைய 4% வளர்ச்சி விகிதம் என்ற அளவோடு ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க முன்நகர்வு.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டுக்கான வேறு சில மதிப்பீடுகளும் நேர்மறையாகவே இருக்கின்றன. அரசு செலவினங்கள் கடந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது 57% உயர்ந்துள்ளன. நிகர மூலதன உருவாக்கம், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 34.7% ஆக உயர்ந்துள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் அரசு முன்னெடுத்த பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த விளைவுகளில் உடனடி விளைவாக இந்தக் குறியீடு பார்க்கப்படுகிறது. தனியார் இறுதி நுகர்வுச் செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59.9% ஆக இருப்பதும், ஏற்றுமதியின் பங்கு 22.9% ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கவை. 2014-15 நிதியாண்டுக்குப் பிறகு முதலாவது காலாண்டில், ஏற்றுமதியின் விகிதாச்சாரம் அதிகரிப்பதும் தற்போதுதான்.
உக்ரைன்-ரஷ்யா யுத்தத்தின் காரணமாக உலகளாவிய சந்தையில் தேவை மற்றும் அளிப்புச் சங்கிலித் தொடர்புகள் அறுபட்டுள்ள நிலையில், ஏற்றுமதியின் விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிநிலையாகப் பார்க்கப்படுகிறது. இதே காலாண்டில், நிதிப் பற்றாக்குறை 20.5% என்ற அளவில் உள்ளது. முதன்மையான 8 தொழில்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலையில் குறைந்துள்ளது. ஆனால், இந்தப் பின்னடைவுகளைத் தாண்டி நடப்பு நிதியாண்டில் 7% வளர்ச்சி என்ற இலக்கை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.