பள்ளி நூலகங்களின் பொற்காலம்!

பள்ளி நூலகங்களின் பொற்காலம்!
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்களைத் திறம்படச் செயல்பட வைப்பதற்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

நூலக வாசிப்பை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் முயற்சியாக மாதந்தோறும் போட்டிகளை நடத்த வேண்டும் என அண்மையில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகஸ்ட்-17அன்று தொடங்கிவைத்த வாசிப்பு இயக்கத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

நூலக வாசிப்பு என்பதைப் பரிந்துரையாக மட்டுமின்றி, பள்ளிப் படிப்பின் ஒரு பகுதியாகவே நடைமுறைப்படுத்திட பள்ளிக் கல்வித் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நூலக வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

வாரந்தோறும் ஒரு பாடவேளை பள்ளி நூலக வாசிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் வாரந்தோறும் ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச்சென்று வாசிக்க அனுமதித்திருப்பது, பள்ளிக் கல்வித் துறை வரலாற்றிலேயே ஒரு மாபெரும் திருப்புமுனையாகும்.

மாணவர்கள் தமது பொறுப்பில் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, புத்தகங்கள் சேதமாகிவிடக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே அவற்றைப் பாதுகாப்பாகப் பூட்டி வைப்பது பெரும்பாலான பள்ளிகளில் வழக்கமாக இருந்தது. மாணவர்களுக்குப் புத்தகங்களைக் கையாளத் தெரியாது, புத்தகங்கள் அழுக்காகிவிடும் என்ற அச்சங்கள் இனிமேலும் தேவையில்லை. மாணவர்கள் படிப்பதற்காகவே பள்ளி நூலகப் புத்தகங்கள் என்பதில் பள்ளிக் கல்வித் துறை உறுதியாக நிற்கிறது.

மாணவர்களிடம் நூலகச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும்வகையில், அவர்கள் படிக்கும் புத்தகங்கள் சார்ந்து ஓவியம், பேச்சு, கட்டுரை, நூலாசிரியர் அறிமுகம், நூல் அறிமுகம், மேற்கோள்களைக் குறிப்பிடுதல் ஆகிய போட்டிகளை மாதந்தோறும் பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சமீபத்திய சுற்றறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

நூலக வாசிப்பு சார்ந்த போட்டிகளை ஒருங்கிணைக்க வட்டாரக் கல்வி அலுவலர்களையும் பள்ளித் துணை ஆய்வாளர்களையும் பொறுப்பாளர்களாக நியமிக்க இந்தச் சுற்றறிக்கை பரிந்துரைத்துள்ளது. நூலக வாசிப்புப் போட்டிகளிலிருந்து பள்ளி, ஒன்றிய, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 2023-இல் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அம்முகாமில் தமிழின் முன்னணி எழுத்தாளர்களோடும் சிறார் எழுத்தாளர்களோடும் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக வாசிப்பு என்பது பாடத்திட்டத்தோடும், பாடநூல்களோடும் முடிந்துவிடக் கூடியது அல்ல; பாடநூல்கள் என்பவை விரிந்து பரந்த அறிவுச் செல்வத்தின் எளிய அறிமுகங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைக்க முடிந்தால், அதுவே கல்வித் துறையின் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும். இந்த வாசிப்பு இயக்கம் நூலகங்களோடு முடிந்துவிடாமல் சிறார் திரைப்படங்கள், செய்தித்தாள் வாசிப்பு என்று மென்மேலும் கிளைவிரித்துவருகிறது. பள்ளி நூலகங்களின் பொற்காலம் இது. தொடரட்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in