அரசமைப்பு அமர்வும் அவசர வழக்குகளும்
இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கும் உதய் உமேஷ் லலித், அரசமைப்பு சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆண்டு முழுவதும் குறைந்தபட்சம் ஒரு அமர்வு செயல்படும் என்றும் அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என்றும் உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் 77,000-க்கும்மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடிப்பதில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வழக்குகளைப் பட்டியலிடுவதில் நவீன தொழில்நுட்பங்களுக்கான தேவை எழுந்திருப்பதையும் அதில் உள்ள சிக்கல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில், மூத்த வழக்கறிஞர்கள் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றனர் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் நிலவிவருகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள யு.யு.லலித், அவசர வழக்குகளைப் பட்டியலிடுவதில் தெளிவும் வெளிப்படைத் தன்மையும் உறுதிசெய்யப்படும் என்று தெரிவித்திருப்பது மேலமை நீதிமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக அமையும்.
மேலும், பிணை மனுக்கள் உள்ளிட்ட அவசர விசாரணை தேவைப்படும் வழக்குகளில் தொடர்புடைய அமர்வுகளை நாடி வழக்கறிஞர்கள் விசாரணையை விரைவுபடுத்தக் கோருவதற்குத் திட்டவட்டமான வழிமுறைகளும் வகுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அரசமைப்பு சார்ந்த வழக்குகளுக்கு ஆண்டு முழுவதும் தனி அமர்வு செயல்படும் என்ற அறிவிப்பும் மிக முக்கியமானது. உயர் நீதிமன்றங்களில் முடிவுசெய்யப்பட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவந்தாலும், அரசமைப்பு சார்ந்த வழக்குகளில் முன்தீர்ப்பு நெறிகளை உருவாக்குவதே மேலமை நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தின் முதன்மைப் பணியாகும்.
அரசமைப்பு சார்ந்த முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அவ்வப்போது தனி அமர்வுகள் கூடுவதற்கு மாற்றாக, நிலையான ஓர் அரசமைப்பு அமர்வின் தேவை தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அதற்கான முன்முயற்சியாகத் தலைமை நீதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது. அதே நேரத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி அடுத்துவரும் இரண்டரை மாதங்களுக்குள் இந்த உறுதிமொழிகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தாக வேண்டும்.
மேலமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பவர்கள், பணிமூப்பின் அடிப்படையிலேயே தேர்வாகிறார்கள். தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து பணி ஓய்வுக் காலம் வரைக்கும் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பார்கள்.
தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதற்கும் ஓய்வு பெறுவதற்கும் இடையிலான கால அளவு மிகவும் குறைவானதாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் நீதித் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் சீர்திருத்தங்களை நிகழ்த்திவிட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
ஆனாலும், தலைமை நீதிபதி யு.யு.லலித் உறுதியளித்தவாறு, அரசமைப்புக்கு என தனி அமர்வையும் அவசர வழக்குகளில் வெளிப்படைத்தன்மையையும் நடைமுறைப்படுத்துவார் எனில், இந்திய நீதித் துறையின் வரலாற்றில் அவரது பணிக்காலம் என்றென்றும் நினைவுகூரத்தக்கதாக அமையும்.
