சமய நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவோம்!

சமய நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவோம்!
Updated on
1 min read

திருக்குறளின் ஆன்மிகத் தன்மை, ஜி.யு.போப் மொழிபெயர்ப்பில் சிதைக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்து, திருவள்ளுவர் தொடர்பாக மீண்டும் ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

திருவள்ளுவர் உருவத்தின் ஆடை நிறம் சார்ந்து ஏற்கெனவே ஒரு சர்ச்சை எழுந்து ஓய்ந்திருக்கும் நிலையில், இம்முறை அது திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றியதாக அமைந்துள்ளது.

காலனியாதிக்கக் காலகட்டத்தின்போதும் அதற்கு முன்பும் கிறிஸ்தவ சமய ஊழியர்கள் தங்களது சமயத்தைப் பரப்புவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுதான் இந்தியாவுக்கு வந்தனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று இந்தியா வந்தவர்களுக்கும்கூட, இந்தியாவைக் காலனியக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் முதன்மைப் பொறுப்பாக இருந்தது. என்றபோதும் ஒரு சில பிரிட்டிஷ் அதிகாரிகளும் கிறிஸ்தவ சமய ஊழியர்களும் இந்திய மொழிகளுக்கும் பண்பாட்டுக்கும் ஆற்றிய தொண்டுகள் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தக்கவை.

சார்லஸ் வில்கின்ஸ், பகவத் கீதையை ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்த்தார். வில்லியம் ஜோன்ஸ், ஜெயதேவரின் கீதகோவிந்தத்தை மொழிபெயர்த்தார். இவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்குப் பின்னரே, இந்தியாவின் சமய இலக்கியங்கள் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

அதற்குப் பிறகு, கீழைத்தேய சமய இலக்கியங்களுக்கு எத்தனையோ மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன என்றபோதும், முன்னோடி முயற்சிகள் என்ற வகையில் வில்கின்ஸ், ஜோன்ஸ் ஆகியோருக்கு இந்தியர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள்.

சம்ஸ்கிருத இலக்கியங்களைப் போலவே, தமிழிலிருந்து சைவ சமய இலக்கியங்களும் சைவ சாத்திரங்களும் கிறிஸ்தவ சமய ஊழியர்களால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குறளை ஆங்கிலத்துக்கு முழுமையாக மொழிபெயர்த்த ஜி.யு.போப், ‘திருவாசகம்’, ‘திருவருட்பயன்’ ஆகிய நூல்களை மட்டுமின்றி ‘புறப்பொருள் வெண்பா மாலை’யையும் மொழிபெயர்த்தவர்.

புறநானூற்றின் சில பாடல்களையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். சைவ சமயச் சாத்திரங்களையும் தோத்திரங்களையும் ஆங்கிலத்தின் வாயிலாக உலகறியச் செய்தவர் என்பதால், தமிழர்களும் ஜி.யு.போப் போன்ற சமய ஊழியர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள்.

சமய எல்லைகளைத் தாண்டிய உலகப் பொதுமறையான திருக்குறளின் மொழிபெயர்ப்பில், அதன் ஆன்மிகத் தன்மையைத் தவிர்த்த ஜி.யு.போப், சமய இலக்கியமாகவே படைக்கப்பட்ட திருவாசகத்தை ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து சில பாடல்களை 2005-ல் இளையராஜா மேற்கத்திய இசைப்பாணியைப் பின்பற்றி தனி இசைத் தொகுப்பாக வெளியிட்டார். அத்தொகுப்பில் இடம்பெற்ற சில பாடல்களில் ஜி.யு.போப் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றிருந்தது.

சமய அடிப்படையில் மக்களிடையே எழும் வேற்றுமைகளைக் களைய வேண்டிய இந்தக் காலகட்டத்தில், சமய எல்லைகளைத் தாண்டிய இத்தகைய கூட்டு முயற்சிகள்தான் தற்போது அவசியமாக இருக்கின்றன. சமயம் தாண்டிய பிணைப்பை ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகளைத்தான் அரசமைப்பின் முக்கியஸ்தர்கள் வளர்த்தெடுக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in