

செல்பேசிச் செயலிகளின் வழியாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவையை வழங்குவதில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கு இடையே போட்டிகள் நிலவிவரும் நிலையில், தற்போது கேரள அரசும் முக்கியப் போட்டியாளராகக் களத்தில் இறங்கியிருக்கிறது.
அண்மையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன், ‘கேரள சவாரி’ என்ற பெயரில் இச்சேவையைத் தொடங்கிவைத்துள்ளார். முதல் கட்டமாக, திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில், 228 கார்களும் 321 ஆட்டோக்களும் இணைந்துள்ளன. செயலியைத் தொடங்கிவைப்பதற்கு முன்னால், இச்சேவையில் இணைந்துள்ள ஓட்டுநர்களுக்கு அது குறித்த தொழில்நுட்பப் பயிற்சியையும் அரசு அளித்துள்ளது.
கேரள அரசின் தொழிலாளர் நலத் துறையின் கீழ், மோட்டார் வாகனத் தொழிலாளர் நல வாரியம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இந்தியத் தொலைபேசித் தொழில் துறை செயலிக்கான தொழில்நுட்பங்களைக் கையாள்கிறது. திருவனந்தபுரத்தை அடுத்து எர்ணாகுளம், கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர், திருச்சூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
மாநில அரசே இப்படி இணையவழி வாடகை டாக்ஸி சேவையை நடத்துவதற்குக் கேரளம் ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது என்றபோதும், இதைப் போன்ற ஒரு செயலிவழிச் சேவையை 2018-லேயே கோவா அரசும் முயன்றுபார்த்தது. தனியார் வாடகை டாக்ஸி ஓட்டுநர்களின் பலத்த எதிர்ப்பாலும், கடைசி நேரத்தில் ஓட்டுநர்கள் சவாரிக்கு மறுத்துவிடுகிறார்கள் என்று பயணிகள் தெரிவித்த கருத்துகளாலும் அம்முயற்சி ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.
தற்போது கேரளத்தில் தொடங்கப்பட்டுள்ள சேவையில் இக்குறைகள் களையப்பட்டால் வாடகை டாக்ஸி சேவையில் அது ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். தற்போது இச்சேவையில், பயணிகளும் ஓட்டுநர்களும் தங்களது குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கும்வகையில் 24 மணி நேரமும் மோட்டார் வாகனத் தொழிலாளர் நல வாரியத்துடன் பேசுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
சேவையில் இணைந்துள்ள அனைத்து வாகனங்களிலும் படிப்படியாக ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படவுள்ளன. ஆபத்தில் இருப்பதைத் தெரிவிக்கச் செயலியில் தனி வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. செயலியின் வழியாகவே அருகிலிருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்கள் வாடகை டாக்ஸி பயணத்துக்கு விதிக்கும் கட்டணத்தைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் அரசு இச்சேவையை வழங்கும் என்பதோடு, வாடகை டாக்ஸி ஓட்டுநர்களின் ஊதியமும் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு இச்சேவைக்காக 8 சதவீத சேவைக் கட்டணத்தை மட்டுமே பெற இருப்பதால், அம்மாநில ஓட்டுநர்களுக்கு இச்சேவை ஒரு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. பிரபல தனியார் பெருநிறுவனங்களின் சேவைக் கட்டணத்தைக் காட்டிலும் இது 20 முதல் 30 சதவீதம் வரையில் குறைவாக இருக்கும்.
பயணிகள், ஓட்டுநர் என இருதரப்புக்கும் பயனளிக்கும் இந்தச் சேவையை மாநில அரசே தொடங்கிவைத்திருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது.