

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் உடல் உறுப்பு தானங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஏற்கெனவே, இந்திய அளவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. உடல் உறுப்பு தானங்களின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களின் விளைவு இது.
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி, நடப்பாண்டில் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 17 வரையில், மூளைச்சாவு அடைந்த 18 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 5 பேரின் உடல் உறுப்புகளே தானமாகப் பெறப்பட்டன. தற்போது, தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவமனைகள், மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளைத் தானம் வழங்குவதற்குச் சான்றளிக்கும் உரிமத்தைப் பெற்றுள்ளன.
மேலும் இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், மாற்று அறுவைசிகிச்சை இல்லாத உறுப்புகளை மீட்டெடுக்கும் மையங்களாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டிருப்பதும் ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருவதும் பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தமுள்ள 33 அரசு மருத்துவக் கல்லூரிகளும் உடல் தானத்துக்கான வசதிகளைப் பெற்றால், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் பெரும் சாதனையை நிகழ்த்துவது உறுதி. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள், முன்னுரிமை அடிப்படையில் அரசு மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், தோல், விழிவெண்படலம் ஆகிய உறுப்புகளையும் எலும்புகளையும் மற்றொருவருக்குப் பொருத்த முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். தற்போதைய நிலவரப்படி 2,700-க்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரகத் தானத்துக்காகக் காத்திருக்கின்றனர். கல்லீரல் தானத்திற்காக 21 பேரும் இதய தானத்திற்காக 6 பேரும் காத்திருக்கின்றனர்.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுப் பேரணிகளும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. உடல் உறுப்பு தானத்தைப் போலவே எலும்பு தானம் குறித்தும் அண்மைக்காலமாகப் பேசப்படுகிறது.
உடல் தானம் செய்த ஒருவரின் எலும்புகளை 25 நோயாளிகளுக்குப் பொருத்த முடியும் என்று அண்மையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்தத் தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் உச்சமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது வாழ்விணையருமே உடல் தானம் செய்து, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மென்மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.