

தேனி சட்டக் கல்லூரி மாணவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், அரசமைப்பின் முதன்மைச் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கரைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துகளும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அவரது உருவப்படம் இடம்பெற வேண்டும் என்று பிறப்பித்திருக்கும் உத்தரவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
கல்லூரி முதல்வரின் அறையில் அம்பேத்கரின் உருவப்படம் இடம்பெற வேண்டும், தமிழ்வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர், கல்லூரி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். அவரது அணுகுமுறையில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய கல்லூரி நிர்வாகம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அம்மாணவர் தனக்காக வாதிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின்போது, குறிப்பிட்ட அம்மாணவர் தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் கைப்பட மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியதோடு, கல்லூரி நிர்வாகம் உடனடியாக அம்பேத்கரின் உருவப்படத்தை நிறுவி, அதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியும் உயர் நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை அதற்கடுத்த இரண்டாம் நாளுக்குத் தள்ளிவைத்தது.
பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பில் நான்காம் ஆண்டு படித்துவரும் நிலையில், அவர் மீது எடுக்கப்படும் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் அவரது எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடும் என்ற அக்கறையோடு இந்த வழக்கு விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழக்குகள் எதுவாயினும் அவற்றை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பளிப்பதே மனுதாரர்களுக்கு நீதி பயப்பதாக அமையும் என்ற நோக்கில், இவ்வழக்கின் வேகம் வரவேற்புக்குரியது.
ஒவ்வொரு சட்டக் கல்லூரி மாணவருக்கும் அம்பேத்கர் மிகச் சிறந்த முன்னுதாரணம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் உருவப்படம் நிறுவப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குநரைக் கேட்டுக்கொண்டுள்ளது. அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்’ முழக்கத்தைத் தீர்ப்பில் பதிவுசெய்துள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தனது நீதிமன்ற அலுவலக அறையில் விரைவில் அம்பேத்கர் படம் நிறுவப்படும் என்ற உறுதியையும் தீர்ப்பிலேயே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டக் கல்லூரிகளின் அலுவலகங்களில் மட்டுமல்ல, விழா அரங்குகளிலும் அம்பேத்கரின் படம் இடம்பெற வேண்டும். அவரது பெயரில் இயங்கும் சட்டப் பல்கலைக்கழகத்தின் வினாத்தாள்களில், பல்கலைக்கழகப் பெயரே தவிர்க்கப்படுகிறது என்று மாணவர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அம்பேத்கர் மட்டுமில்லை, தேசத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் ஆகியோரின் பெயர்களில் இயங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அவர்களது உருவப்படங்களைத் தங்களது அலுவலகத்தில் மட்டுமின்றி, விழா மேடைகளிலும் சிறப்பிக்க வேண்டும். அந்த உருவப்படங்கள், அவர்களது வாழ்நாள் செய்தியை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தியபடியே இருக்கும்.